SuperTopAds

வீதியில் நின்றவர்கள் மீது வேண்டுமென்றே வாகனத்தால் மோதிய சம்பவம்! ஒருவர் பலி, இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
வீதியில் நின்றவர்கள் மீது வேண்டுமென்றே வாகனத்தால் மோதிய சம்பவம்! ஒருவர் பலி, இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயம்...

பழுதடைந்த வாகனத்தின் அருகில் நின்றவர்கள் மீது மற்றொரு வாகனத்தால் மோதி கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது, இந்த சம்பவத்தில் பழுதடைந்த வாகனத்தை திருத்திக் கொண்டிருந்த நபர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் கஹட்டகஸ்திகிலிய - ஹொரவப்பொத்தானை வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

இந்த விபத்து சம்பவம் 14 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இயந்திரக் கோளாறு காரணமாக கார் ஒன்று இடைநடுவே வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இதனை சரிபார்ப்பதற்காக அவ்விடத்திற்கு முச்சக்கர வண்டியில் திருத்துனர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார். 

இதன்போது ஹொரவ்பொத்தானை நோக்கி பயணித்த வேன், நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகில் இருந்தவர்கள் மீது மோதி விபத்த்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விபத்து திட்டமிட்டு செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் இதற்கு முன்னர் அவ்விடத்திற்கு வந்துள்ளது. அந்த வாகனத்தின் சாரதி பழுதடைந்த காரின் சாரதியுடன் அருகில் நின்று நீண்டநேரம் உரையாடியுள்ளார். 

பின்னர் அந்த வாகன சாரதிக்கும் பழுதடைந்த காரின் சாரதி உள்ளிட்ட அங்கிருந்த நபர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் அதன் பின்னரே வேன் சாரதி அங்கிருந்து சென்று, சிறிது நேரம் கழித்து பழிவாங்கும் நோக்கத்தில் 

வேகமாக அங்கு இருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது காரின் அருகில் இருந்த 42 வயதுடைய நபர், 42 வயதுடைய அவரின் மனைவி, 7 வயதுடைய அவர்களின் குழந்தை, 

52 வயதுடைய வாகன திருத்துனர் மற்றும் அவருடன் வருகை தந்த 14 வயதுடைய சிறுவன் உள்ளிட்டவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 

குறித்த வாகன திருத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவர் கவரங்குளம், மிஹிந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார். விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.