மீற்றர் வட்டி மாபியாக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பொலிஸாரை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்! வடமாகாண ஆளுநர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்..
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை அடித்து துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வட்டி மாபியாக்களுடன் தொடர்புடைய பொலிஸாரையும் அடையாளம் கண்டு சட்டத்தின் முன்னால் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
மீற்றர் வட்டி கும்பலுக்கு சுன்னாகம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் நெருங்கிய தொடர்புள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் கும்பலுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு வழங்கச் சென்றாலும் அவர் திருப்பி அனுப்புவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்துக்குப் புறம்பாக செயற்படுவோர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பொலிஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பொலிஸ் உயர்மட்டத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.