மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது! வட்டி மாபியாக்களுடன் சுன்னாகம் பொலிஸாருக்கு நெருங்கிய தொடர்பாம்..
யாழ்.மாவட்டத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை தோட்ட வெளிக்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
யாழ்.அளவெட்டியை சேர்ந்த குறித்த நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த காணொளி தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.
தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.
மீற்றர் வட்டிக்கு வழங்கிவிட்டு பணத்தை மீள வசூலிப்பதற்காக வர்த்தகர்களை அடித்துத் துன்புறுத்தும் இருபதற்கும் மேற்பட்ட காணொளிகள் பொலிஸ் உயர்மட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சுன்னாகத்தில் நேற்றுமுன்தினம் காரில் பயணித்தவரை வாகனத்தினால் மோதி
கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸில் சரணடைந்த ஜெகன் உள்ளிட்ட மூவருக்கும் மீற்றர் வட்டிக்கு பெற்றவர்களை அடித்துத் துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.
மருதனார்மடம் சந்தைக்கு அண்மையாக உள்ள தோட்டக்காணிக்கு அழைத்தே பலரை அடித்துத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் உள்ளனர் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கும்பலுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு வழங்கச் சென்றாலும் அவர் திருப்பி அனுப்புவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காணொளியில் முகக்கவசம் அணிந்து அடித்து துன்புறத்தும் நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப்பின் குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
"காணொளிகள் ஒன்றரை வருடத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. தற்போது அந்தக் குழுவுக்குள் முரண் ஏற்பட்டுள்ளதால் பல காணொளிகள் வெளியாகியுள்ளன.
அடித்து துன்புறுத்தல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களினால் எந்த முறைப்பாடும் பொலிஸில் முன்வைக்கப்படவில்லை.
எனினும் தற்போது வெளியாகியுள்ள காணொளிகளின் அடிப்படையில் அளவெட்டியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பொலிஸார் தெரிவித்தனர்.