SuperTopAds

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அடுத்தவாரம் கொழும்பில் கூடுவதற்கு இணக்கம்!

ஆசிரியர் - Admin
தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அடுத்தவாரம் கொழும்பில் கூடுவதற்கு இணக்கம்!

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அடுத்தவாரம் கொழும்பில் கூடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.     

இந்த கூட்டம் தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்களுடன் தான் கலந்துரையாடியதாக அக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் குறித்த சந்திப்பை, எதிர்வரும் 25 அல்லது 26 ஆம் திகதி நடத்துவதற்கு பெரும்பாலான தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கலந்துரையாடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சமஷ்டித் தீர்வினை கூட்டாக முன்வைப்பதற்கான கலந்துரையாடலை நடத்த கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் கூட அன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.