இலங்கை ரூபாய்க்கு டொலர் மாற்றி தருவதாக மோசடி! 825 டொலர் மற்றும் 28 லட்சம் ரூபாயுடன் 4 பேர் கொண்ட கும்பல் யாழ்ப்பாணத்தில் சிக்கியது..
இலங்கை ரூபாய்க்கு டொலர் மாற்றித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டிருந்த திருகோணமலை மற்றும் மலையகம், அனுராதபுரம் பகுதிகளை சேர்ந்த 4பேர் கொண்ட கும்பல் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கைதானவர்கள் 33 முதல் 53 வயதுக்கு இடைப்பட்ட வயதினர் என கூறப்படுகின்றது. மேலும் மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை, குறைந்த விலைக்கு பெற்றுத்தருவதாகக்கூறி,
அதற்கான பணத்தை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுவருமாறு அறிவித்து, பின்னர் குறித்த நபர்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரிடம், 25 இலட்சம் மற்றும் 18 இலட்சம் ரூபா பணம் அவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.அத்துடன், காலியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம், 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவையும் குறித்த குழுவினர் கொள்ளையிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர்களின் உடமையிலிருது 825 அமெரிக்க டொலரும், 28 இலட்சம் ரூபாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.