SuperTopAds

நண்பனை கடத்தி 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர்!

ஆசிரியர் - Editor I
நண்பனை கடத்தி 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர்!

கல்லூரி மாணவர் ஒருவர் தன் நண்பனையே ஆட்கள் வைத்து கடத்தி 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு புதூரைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகன், ஞான ஆனந்த். அவினாசி சாலையில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஞான ஆனந்தை மர்ம நபர்கள் கடத்திவிட்டதாகவும், 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் ஞான ஆனந்தின் அப்பாவான மனோகரன் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மனோகரன் கொடுத்த புகாரின் பேரில், தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர் ஞான ஆனந்த் செல்போன் சிக்னலை ட்ரேஸ் செய்தனர். பாலக்காடு பைபாஸ் சாலையில் உள்ள கற்பகம் யுனிவர்சிட்டி அருகே சிக்னல் காட்ட உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து தேடியதில், அங்கு உள்ள ஓர் இடிந்த கட்டடத்தில் ஆனந்தை அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

போலீஸார் ஞான ஆனந்தை மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட ஆனந்த், மணிகண்டன் உள்ளிட்ட 4 கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கைது செய்யட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் கடத்தப்பட்ட ஞான ஆனந்தனின் நண்பர் எனவும், ஞான ஆனந்தன் அறிமுகப்படுத்திய நகை வியாபாரியான பெரியசாமி என்பவர், மணிகண்டனிடம் 2.5 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நண்பர்களுடன் இணைந்து கடத்தலில் ஈடுபட்டதாக போலீஸார் கூறுகிறார்கள்.