SuperTopAds

மது விற்பனையை அதிகரிக்க பெண்கள் பெயர்களை வைக்க வேண்டும்: - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

ஆசிரியர் - Editor I
மது விற்பனையை அதிகரிக்க பெண்கள் பெயர்களை வைக்க வேண்டும்: - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

மது விற்பனையை அதிகரிக்க பெண்கள் பெயர்களை வைக்க வேண்டும் என யோசனை கூறிய மராட்டிய மந்திரிக்கு கூட்டணி கட்சியான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவி வகித்து வருகிறார். இவரது அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பவர் கிரிஷ் மகாஜன்.

சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிரிஷ் மகாஜன் பேசுகையில், மாநிலத்தில் மது விற்பனை குறைந்துள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது ஏன் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மது வகைகளுக்கு மகாராஜா போன்ற ஆண் பெயர் வைத்துள்ளோம். அதற்கு பதிலாக ராணி என பெண் பெயரை வைத்தால் மதுவின் விற்பனை அதிகரிக்கும். இதேபோல், புகையிலை விற்பனைக்கும் கமல், விமல், சுமன் என ஆண்களின் பெயர்கள் தான் வைக்கப்ப்ட்டுள்ளது. அவற்றுக்கு பதிலாக பெண்களின் பெயர்களை வைத்துப் பாருங்கள், விற்பனை நிச்சயம் அதிகரிக்கும் என கூறினார். மாநில மந்திரியின் இந்த கருத்து அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சந்திராபூர் காவல் நிலையத்தில் மகளிர் அமைப்பினர் மந்திரி மீது புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கூட்டணி கட்சியான சிவசேனா மந்திரியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சி பத்திரிகையான சாம்னாவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையில், மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மராட்டிய அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால், மது விற்பனையை அதிகரிக்கும் விதமாக மந்திரி பிரச்சாரம் செய்கிறார். பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்தியதற்காக முதல் மந்திரி நிதிஷ்குமாரை பிரதமர் மோடி பாராட்டுகிறார். ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த, மராட்டிய மந்திரி மது விற்பனையை ஊக்குவிக்கிறார். மேலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவருடைய யோசனைகள் உள்ளன என குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே, மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மந்திரி கிரிஷ் மகாஜன், தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.