SuperTopAds

நடிகர் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம்…!!

ஆசிரியர் - Editor II
நடிகர் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம்…!!

ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த இடைதேர்தலில் டி.டி.வி தினகரன் உள்பட பெரும் அரசியல் ஆளுமைகளுக்கு எதிராக நடிகர் விஷாலும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றுவருகிறது. மனு மீதான பரிசீலனைக்காக இன்று காலையே நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்துவிட்டார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தொகுதியில் தங்கிய விஷால், அங்கிருந்தபடியே நிலவரங்களைக் கேட்டறிந்தார்.

மனு பரிசீலனையின்போது சுயேச்சைகளின் மனுக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. 32 சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 39 பேரின் மனுக்கள் இதுவரையில் ஏற்கப்பட்டுள்ளன.

72 வது மனுவாகப் பரிசீலிக்கப்பட்ட விஷாலின் மனு நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, வங்கிக் கணக்கை விஷால் சரிவரத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் விஷாலின் மனுவை நிராகரிக்க வலியுறுத்தினர்.

இந்நிலையில், விஷால் மனு மீதான பரிசீலனை இரண்டரை மணி நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இறுதியில் விஷால் வேட்புமனுவை நிராகரிப்பதாகத் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார்.

வேட்புமனுவை தாக்கல் செய்பவரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன் மொழிய வேண்டும் என்பது விதி. இந்த நிலையில், விஷாலை 10 பேரில் இரண்டு பேர் முன்மொழியவில்லை என்று கூறி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதனையடுத்து வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் நியாயம் இல்லை என்று கூறி விஷால் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.