இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்': ஜோர்டன் எச்சரிக்கை
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தால், "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என ஜோர்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறு அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என, அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனிடம், ஜோர்டனின் அமைச்சர் ஐமன் சஃபாடி தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், அதிபர் டிரம்ப் இந்த முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என டிரம்பின் மருமகனான ஜாரட் கூஷ்னர் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜோர்டனின் அமைச்சர் ஐமன் சஃபாடி, "ஜெருசலேத்தை, இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்து அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனிடம் பேசியுள்ளேன். இந்த முடிவு அரபு மற்றும் இஸ்லாம் நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதோடு, எரிப்பொருள் பதட்டத்தை உருவாக்கி, அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை பாதிக்கும் வகையில் அமையும்" எனக் கூறியுள்ளார்.
ஆனால், இது தொடர்பாக அமெரிக்க அரசுத்துறையிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
டிரம்ப் இவ்வாறு எந்த முடிவையும் அறிவிக்கக்கூடாது என்பதை வலியுறுத்த சர்வதேச ஆதரவை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்.
இது தொடர்பாக ஃபிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் மற்றும் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக பாலத்தீன அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
"ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அறிவித்தாலோ அல்லது அமெரிக்க தூதரகத்தை அங்கு மாற்ற முடிவு செய்தாலோ ஏற்படக்கூடும் பிரச்சனைகள் குறித்து தெரியப்படுத்த" அப்பாஸ் நினைத்ததாக அவரின் ஆலோசகர் மஜ்தி அல்-காலிடி, ஏ எஃப் பி செய்தி நிறுவத்திடம் கூறியுள்ளார்.
டிரம்பின் இந்த முடிவு இரு நாடுகளுக்கிடையே அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என பாலத்தீன தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போர் நடைபெற்றதிலிருந்து கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. 1980ல் அப்பகுதியை இணைத்து நாட்டின் பிரத்யேக களமாக பார்க்கிறது இஸ்ரேல். சர்வதேச சட்டத்தின் கீழ், அப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக கருதப்படுகிறது.
ஜெருசலேத்தை, பிரிக்க முடியாத தலைநகரமாக இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. ஆனால் பாலஸ்தீனியர்கள், கிழக்கு ஜெருசலேத்தை வருங்காலத்தில் அவர்கள் நாட்டின் தலைநகரமாக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
ஜெருசலேம் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காணவும் மற்றும் அந்த பேச்சுவார்த்தைகளின் விளைவுகளை முன்கூட்டியே உணர்ந்து எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது என்ற நிலைப்பாட்டையும் 1948 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க நிர்வாகங்கள் எடுத்திருந்தன.
ஆனால். கடந்தாண்டு நடந்த தேர்தலின் போது வாக்குறுதியளித்த டிரம்ப், இஸ்ரேலுக்கு வலிமையான ஆதரவை வெளிப்படுத்தியதோடு, தான்அலுவலக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, அங்கு அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்தை டெல் எவிவில் இருந்து ஜெருசலேத்துக்கு மாற்றுவதாக உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்த அறிவிப்பை வரும் புதன் கிழமையன்று டிரம்ப் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியது.
"டிரம்ப், அவரது முடிவு என்ன என்பதை தகுந்த நேரத்தில் அறிவிப்பார். பல விஷயங்களை கருத்தில் கொண்டே அவர் எந்த முடிவையும் எடுப்பார். அப்படி முடிவெடுக்கும் போது, அது குறித்த அறிவிப்பையும் அவரே வெளியிடுவார்" என டிரம்பின் முக்கிய ஆலோசகரான கூஷ்னர் தெரிவித்தார்.