மலேசியக் கடலில் 131 இலங்கையர்களுடன் சென்ற கப்பல் சிக்கியது!
அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை மலேசிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதிலிருந்த 131 இலங்கையர்கள் மலேசிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த கப்பல் கடந்த முதலாம் திகதி இடைமறிக்கப்பட்டதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘எட்ரா’ (ETRA) என்ற அந்தக் கப்பல் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் ஒன்பது சிறுவர்கள் என 131 இலங்கையர்களை ஏற்றிச் சென்றதாக மலேசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 இந்தோனேசியர்கள் மற்றும் 4 மலேசியர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய ஐந்து மலேசியர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன் மூலம் ஒரு பாரிய மனித கடத்தலை ரோயல் மலேசிய பொலிஸார் வெற்றிகரமாக தோல்வியடையச் செய்துள்ளதாக பொலிஸ் பிரதானி மொஹமட் ஹருன் தெரிவித்துள்ளார்.