காப்பாற்றிய பாம்பே, உயிருக்கு உலை வைத்த சோகம்…!
வீதியின் குறுக்கே சென்று கொண்டி ருந்த பாம்பொன்று அவ்வழியாக செல் லும் வாகனங்களின் சக்கரங்களின் கீழ் சிக்கி நசுங்குண்டு இறப்பதைத் தவிர்க்க அதனை அங்கிருந்து அகற்ற முற்பட்ட நபரொருவர் அந்தப் பாம்பால் இரு தடவைகள் கடியுண்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்க ஒக்லஹொமா பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே பாம்புகளைப் பிடிப்பதில் அனுபவமுள்ளவரான பாரி லெஸ்டர் என்ற மேற்படி நபர் (57 வயது) சம்பவ தினம் தனது வாகனத்தை ஒஸாய் நகரிலுள்ள வீதியினூடாக செலுத்திச் சென்ற வேளை வீதியின் குறுக்காக பாம்பொன்று செல்வதை கவனித்து வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அவர் மேற்படி சுமார் 42 அங்குல பாம்பை தனது இடது கரத்தால் பற்றித் தூக்கிய போது அது அவரது பிடியிலிருந்து தலையை விடுவித்து அவரது அந்தக் கரத்தைத் தீண்டியுள்ளது.
தொடர்ந்து அந்தக் கரத்திலிருந்த பாம்பை தனது வலது கரத்திற்கு மாற்றவும் பாம்பு அந்தக் கரத்திலும் தீண்டியுள்ளது. இதனையடுத்து பாம்பை பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக அதனை தனது வாகனத்திலிருந்த வெற்றுப் பெட்டியொன்றில் திணித்த பாரி லெஸ்டர் வாகனத்தை தனது வீட்டிற்கு செலுத்திச் சென்று தனது குடும்பத்தினரின் உதவியுடன் அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவியதால் சிறிது நேரத்திலேயே மரணமானார்.