வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்கள் நாளை மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!
வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள் இணைந்து நாளை மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளன. இது தொடர்பாக, வட-கிழக்கு ஊடக அமைப்புக்கள் சார்பில்
யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள் இணைந்து நாளை மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளன. இது தொடர்பாக, வட-கிழக்கு ஊடக அமைப்புக்கள் சார்பில் யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
நீண்டதொரு யுத்த சூழலில் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளினில், தமிழ் தேசியம் சார்ந்த ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகள், பலவழிகளிலும் கட்டவிழ்த்து விடப்பட்டே வந்துள்ளது. அது கொலையாகவோ, காணாமல் போகச்செய்வதாகவோ அல்லது தாக்குதல், அச்சுறுத்தலாகவோ பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. இத்தகைய கோரமிக்க சூழலில் நாம் எமது 41 சகபாடிகளை இழந்து இன்றுவரை அவர்களிற்கு நீதிகிட்டாது போராடி வருகின்றோம்.
நல்லாட்சியென சொல்லிக்கொண்டு கதிரையேறி அரசு இன்று கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள எமது சக ஊடக நண்பர்களிற்கு விலைபேசி நட்டஈடு தருவது பற்றி பேசிக்கொண்டிருக்கின்றது. அது பொறுப்புக்கூறுவதற்கு தமிழ் மக்களின் முன்னால் வருவதற்கு தொடர்ந்தும் கள்ள மௌனத்துடன் பின்னடித்தும் நிற்கின்றது. ஆனால் மறுபுறம் தெற்கில் படுகொலையான சகோதர இன ஊடகவியலாளர்களது கொலைகள் தொடர்பில் விசாரணைகளை அரசியல் நலன்கருதி முன்னெடுக்க முயல்கின்றது. அவ்விசாரணைகள் கூட வெறும் இழுத்தடிப்பாகவே வருடக்கணக்கில் நடந்தேறிவருகின்றது.
இந்நிலையில் அரசபடைகளாலும் அதனோடிணைந்து செயற்பட்ட துணைப்படைகளாலும் அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு நீதி கேட்டு மாமனிதர் தர்மரத்தினம் சிவராம்(தராகி) படுகொலை அரங்கேற்றப்பட்ட நினைவு நாளில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களான நாம் மட்டக்களப்பில் முதல் தடவையாக ஒன்று கூடவுள்ளோம்.
எதிர்வரும் 28ம் திகதி காலை 10.00மணிக்கு மட்டக்களப்பு நகரில் நாம் ஒன்று கூடி ஊடகப் படுகொலைகளிற்கு நீதி கோரி மீண்டும் உமது குரல்களை ஒலிக்கவிடவுள்ளோம். உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிரை கொடுத்த ஒரு பரம்பரையினில் பயணிக்கும் தமிழ் தேசிய ஊடகத்துறை சார்ந்த அனைத்து ஊடக அமைப்புக்களினதும் பங்கெடுப்புடன் இக்கவனயீர்ப்பு போராட்டம் நடக்கவுள்ளது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறை தனது பணியினை மக்கள் நலன் சார்ந்து ஆற்றுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்பதே நல்லாட்சிக்கான அழகாகும். அவ்வகையினில் கொல்லப்பட்ட எமது சகநண்பர்களிற்கான நீதி கோரும் பயணத்தை அற்பசொற்ப சலுகைகளிற்காக நாம் அடகுவைக்கப்போவதில்லையென்பதை மீண்டுமொருமுறை மட்டக்களப்பில் ஒன்று திரண்டு வெளிப்படுத்தவுள்ளோம்.
ஊடகப்படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொள்வதுடன், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கான அவர்களது உரிமையினை உறுதிப்படுத்திக் கொள்ள அனைத்து தரப்புக்களினதும் ஆதரவையும் நாம் வேண்டிநிற்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.