யாழ்.வேலணை பிரதேசசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்படலாம் என்ற அச்சத்தில் கூட்டம் ஒத்திவைப்பு! உறுப்பினர்கள் சீற்றம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வேலணை பிரதேசசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்படலாம் என்ற அச்சத்தில் கூட்டம் ஒத்திவைப்பு! உறுப்பினர்கள் சீற்றம்..

யாழ்.வேலணை பிரதேசசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டு கூட்டம் இன்று நடைபெறுவதாக திகதியிடப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை தொிவித்துள்ளனர். 

வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கூட்டம் இன்று மதியம் ஒரு மணிக்கு நடைபெறுமென உறுப்பினர்களுக்கு கடந்த 26 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இன்று நடைபெற இருந்த விசேட கூட்டமானது தவிர்க்க முடியாத காரணத்தினால் தவிசாளரினால் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த கூட்டம் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி மதியம் ஒரு மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தந்தி ( Telegraph ) மூலம் உறுப்பினர்களுக்கு இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அனுப்பப்பட்ட தந்தி ( Telegraph ) தமது கரங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என உறுப்பினர்கள் சிலர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதன் காரனமாகத்தான் கூட்டத்தினை நடாத்தாது இழுத்தடிப்பதாகவும் உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம் சபை அமர்விற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வருகைதந்திருந்தனர் அதே வேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்களும், 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வருகைதரவில்லை.

20 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 8 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக 6 உறுப்பினர்களும், 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக தலா ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு