ஜெ. மகள் அம்ருதாவுக்கு கொலை மிரட்டல்…!
பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து அவருக்கு அய்யங்கார் முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்றும் அந்த இறுதி சடங்கை செய்ய தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அம்ருதா ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்- அமைச்சர், நீதிபதிகள் உள்பட பலருக்கு மனு அனுப்பி இருந்தார்.
பின்னர் அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். தான் ஜெயலலிதா மகள் என்றும், டி.என்.ஏ. பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கர்நாடக ஐகோர்ட்டை நாடும்படி உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த நாள் முதல் அம்ருதாவுக்கு போனில் கொலை மிரட்டல் வந்தது.
இதனால் அவர் செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டார். பெங்களூரு, கெங்கேகிரியில் உள்ள தனது வீட்டுக்கும் அவர் வரவில்லை. அவர் ரகசிய இடத்தில் தங்கி இருக்கிறார்.
அவருக்கு கர்நாடக போலீசார் பாதுகாப்பு அளித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மைதான் என்று அம்ருதாவின் உறவினர் லலிதா கூறி இருந்தார்.
தற்போது அவரது வீட்டுக்கும் கர்நாடக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவுக்கு பிரசவம் பார்த்தபோது உடன் இருந்ததாக கூறும் உறவுபெண் ஜெயலட்சுமி தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.
ஜெயலட்சுமியுடன் பிரசவத்தின் போது உடன் இருந்ததாக கூறும் இன்னொரு உறவு பெண் ரஞ்சனி ரவீந்திரநாத் தற்போது பெங்களூருவை அடுத்த பன்னார்கட்டாவில் வசித்து வருகிறார். அவருக்கும் மிரட்டல்கள் வருகின்றன. அவரது வீட்டுக்கு தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்