SuperTopAds

அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக இந்துக்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகளை சகித்துக் கொள்ளவே முடியாது..! அங்கஜன் காட்டம்..

ஆசிரியர் - Editor I
அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக இந்துக்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகளை சகித்துக் கொள்ளவே முடியாது..! அங்கஜன் காட்டம்..

நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றில் “நந்தி ஒழிக” என எழுப்பட்ட கோஷம் இந்து சமயத்தவர்களை இழிவபடுத்தியுள்ளதாக கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், 

அரசாங்கத்தை விமர்சிக்கவேண்டும் என்பதற்காக இந்த சமய மக்களின் சின்னமான நந்திக் கொடியை அவமரியாதை செய்வதை சகித்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, நந்தி என்பது இந்துக்களின் கொடியில் உள்ள அடையாளம் என்பதோடு, இந்துக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகவும் விளங்குகிறது. விமர்சனங்களை முன்வைக்கும்போதும், 

சமூக மத நம்பிக்கைகளையும், புனித அடையாளங்களையும் மதிக்க வேண்டும் என்பதை எதிரணியினர் கற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் அனைத்து இன மக்களையும் விரைவுபடுத்தும் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் நிலையில் இவ்வாறு மத அடையாளங்களை இழிவு படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது யாழ் மண்ணோடு வரலாற்றுக்கால தொடர்புடைய நந்தியை அவமதிப்பதானது எம் மக்களையும் மண்ணையும் அவமதிப்பதற்கு ஈடானதாகும்.நந்திக்கொடியானது யாழ்.இராச்ச்யத்தின் கொடி என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

குறித்த பதாகையை தயாரித்தவர்களும், அதை தாங்கியவர்களும் இச்செயலுக்காக இந்துக்களிடமும், தமிழர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.