காணி பிணக்கை தீர்க்க பாலியல் இலஞ்சம் மற்றும் ஒரு லட்சம் பண இலஞ்சம்..! பொலிஸ் அதிகாரியை பொறிவைத்து பிடித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு..
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றிருந்த பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி இலஞ்சத்தை பெறுவதற்காக சென்றிருந்தபோது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பொறியில் சிக்கியுள்ளார்.
குறித்த சம்பவம் புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 50 வயதான வனாத்துவில்லு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பத்திரத்ன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தெரிவித்தது.காணிப் பிரச்சினை ஒன்று தொடர்பில் பொலிஸாருக்கு முன் வைக்கப்பட்டிருந்த முறைப்பாடுகள் தொடர்பில் நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க,
குறித்த பெண்ணிடம் இந்த பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக் குழு தெரிவித்தது. இது தொடர்பில் அந்த பெண் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் முறையிட்ட பின்னர்,
இலஞ்ச ஊழல் ஆணைக் குழு வைத்த பொறியில் சிக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நண்பகல், பொலிஸ் பொறுப்பதிகாரி, புத்தளம் பகுதியின் ஹோட்டல் அறையொன்றில் வைத்து
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் இலஞ்சத்துக்கு மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபா பணமும் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரியால் இலஞ்சமாக கோரப்பட்டுள்ளதாக
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேலதிக விசரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைப் பணிப்பாளர்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்கவின் ஆலோசனை பிரகாரம் விஷேட குழுவினர் முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபர் இன்று கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.