தடுப்பூசி பெறாதவர்கள் கவனத்திற்கு..! பொது இடங்களுக்குள் நுழைவதை தடுக்க வருகிறது புதிய சட்டம்..
தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைவதை தடுக்கும் வகையிலான புதிய சட்டங்களை அமுல்ப்படுத்துவது தொடர்பாக பரிசீலிப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு எவரையும் வற்புறுத்த முடியாது. ஒவ்வொருவருக்கும் தமது வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை உள்ளது.
அதேவேளை, இன்னொருவரின் உயிரைப் பறிப்பதற்கு உரிமையில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
இந்நிலையில் கொவிட் தடுப்பூசி ஒன்றைக் கூட இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களில் கூடுவதைத் தடுக்கும் வகையிலான சட்டங்களை
அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார். ஐரோப்பாவிலும் இது போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறினால், மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.