மதுபான விருந்து இல்லாத, பூரணமாக தடுப்பூசி பெற்றவர்கள் மட்டும் பங்குகொள்ளும் திருமண நிகழ்வுகளை அனுமதிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இணக்கம்..
மதுபான விருந்து இல்லாமல் பூரணமாக தடுப்பூசி பெற்றவர்களுடன் நடத்தப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திருமணங்களை நடாத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இணக்கம் தொிவித்திருக்கின்றது.
சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிலவும் கொவிட் தொற்று பரவல் நிலை காரணமாகக் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கத்தினால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய
இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது, தற்போதைய சட்டக்கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் திருமண வைபவங்களை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
கொவிட் சுகாதார வழிகாட்டலின் கீழ், அனுமதி வழங்கப்படக்கூடிய குறைந்தபட்ச எண்ணிக்கையிலான விருந்தினர்களைக் கொண்டு திருமண வைபவங்களை நடத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, நடத்தப்படவுள்ள திருமண வைபவங்களை மதுபான விருந்து இல்லாமல், பூரணமாகத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களை மாத்திரம் திருமண வைபவங்களில் அனுமதியளிக்கும் வகையிலும் சுகாதார வழிகாட்டல் ஒன்றை தயாரிக்க
இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சிறிய, நடுத்தரளவு திருமண சேவை வழங்குநர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்த இந்தக் கோரிக்கை தேசிய கொவிட் செயலணியிடம்
முன்வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.