சிரியா மீது ராணுவ தாக்குதல் நீடிக்கும்; டிரம்ப் எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
சிரியா மீது ராணுவ தாக்குதல் நீடிக்கும்; டிரம்ப் எச்சரிக்கை

அரபுநாடான சிரியாவில் 2012-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு புரட்சி படையினர் மற்றும் மதவாத அமைப்பினர் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

இந்த படையினருக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன.

புரட்சி படையினர் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வைத்துள்ளனர். அவற்றை மீட்பதற்கு சிரியா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷிய ராணுவம் நேரடியாக அவர்களுடன் சேர்ந்து புரட்சி படையுடன் போரிட்டு வருகிறது. இதன் காரணமாக புரட்சி படையிடம் இருந்த பல பகுதிகள் மீட்கப்பட்டன.

தலைநகரம் டமாஸ்கஸ் அருகே உள்ள கிழக்கு கூடா என்ற நகரம் புரட்சி படையினரிடம் இருந்தது. அந்த நகரை மீட்பதற்கு சமீப காலமாக சிரியா ராணுவம் கடுமையாக போரிட்டது.

அப்போது வி‌ஷவாயு அடங்கிய ரசாயன குண்டுகளை ராணுவம் வீசியது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் உயிரிழந்தனர். அதன் பிறகு அந்த நகரம் மீட்கப்பட்டது.

ரசாயன தாக்குதலுக்கு அப்போதே அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்தது. மீண்டும் ரசாயன தாக்குதல் நடந்தால் நாங்கள் பார்த்து கொண்டு இருக்க மாட்டோம் என்று அமெரிக்கா கூறியது.

இந்த நிலையில் புரட்சி படையிடம் இருந்த மற்றொரு நகரமான டூமாவை மீட்பதற்கு கடந்த வாரம் தாக்குதல் நடந்தது. அப்போதும் ரசாயன குண்டுகளை வீசினார்கள். இதில், 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100 பேர் ரசாயன குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டனர்.

இது, அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறும் போது, ரசாயன குண்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எங்கள் ஏவுகணை உங்களை சந்திக்க வரும். எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று கூறி இருந்தார்.

அவர் சொன்னபடியே நேற்று அதிகாலை அமெரிக்கா சிரியா மீது நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. அமெரிக்காவுடன் சேர்ந்து இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளும் தாக்குதல் நடத்தின.

கடலில் நிறுத்தப்பட்டு இருந்த கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் மூலமும், விமானங்கள் மூலமும் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.

100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பறந்து வந்து தாக்கின. தலைநகரம் டமாஸ்கஸ் அருகே உள்ள சிரியாவின் ரசாயன ஆராய்ச்சி மையம், பசரா என்ற இடத்தில் உள்ள ரசாயன ஆயுத தயாரிப்பு கூடம், காம்ஸ் என்ற இடத்தில் உள்ள ரசாயன ஆயுத கிடங்கு ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், அந்த இடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறி இருக்கிறது. ஆனால், சிரியா இந்த தாக்குதலில் சிறிய சேதங்கள் தான் ஏற்பட்டன. எங்கள் ராணுவ மையங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று கூறி உள்ளது.

இது தொடர்பாக ரஷியா கூறும் போது, மொத்தம் 103 ஏவுகணைகள் சிரியா மீது தாக்கப்பட்டது. அவற்றில் 71 ஏவுகணைகளை சிரியா ராணுவம் நடுவானிலேயே அழித்து விட்டது. சிரியாவில் பெரிய பாதிப்புகள் இல்லை என்று கூறி உள்ளது.

ஆனால், அந்த 3 இடங்களையும் தாக்குதலுக்கு முன்பும், பின்பும் செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில், அந்த இடங்கள் தரைமட்டமாகி கிடக்கும் காட்சி உள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அமெரிக்கா, சிரியா இரு நாடுகளுமே கூறி இருக்கின்றன. 3 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாக சிரியா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் நடத்திய தாக்குதலுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷிய அதிபர் புதின் இதுபற்றி கூறும்போது, அமெரிக்கா தனது அதிகார பலத்தை காட்டும் வகையில் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது. சிரியாவில் மாபெரும் மனித பேரழிவை ஏற்படுத்த முயற்சித்து இருக்கிறார்கள். இது, சர்வதேச நல்லுறவுக்கு நல்லது அல்ல என்று கூறி உள்ளார்.

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் கூறும் போது, அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதல் நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிராக இன்னும் உறுதிப்பாட்டோடு தாக்குதல் நடத்துவதற்கு தூண்டுதலை ஏற்படுத்தி உள்ளது என்று கூறி உள்ளார்.

சீனா மற்றும் ஈரான் நாடுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் நடைபெற்றது.

அப்போது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷியா கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. 15 உறுப்பினர்கள் கொண்ட சபையில் சீனா, பொலிவியா ஆகிய நாடுகள் மட்டும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

அதே நேரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, நெதர்லாந்து, சுவீடன், குவைத், போலந்து, ஐவரி கோஸ்ட் உள்பட 8 நாடுகள் எதிராக வாக்களித்தன.

எத்தியோப்பியா, கஜகஸ்தான், கினியா, பெரு ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதனால் அமெரிக்காவுக்கு கண்டனம் விதிக்கும் தீர்மானம் தோல்வி அடைந்தது.

இந்த தீர்மானத்தின் போது, பேசிய அமெரிக்க ஐ.நா. தூதர் நிக்கி காலே கூறியதாவது:-

சிரியா நடத்திய ரசாயன தாக்குதலையும், அத்துமீறலையும் தடுக்கும் வகையில் தான் அவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் ரசாயன தாக்குதல் நடத்தலாம்.

இது சம்பந்தமாக எங்கள் அதிபர் டொனால்டு டிரம்ப் என்னிடம் பேசினார். அவர் இனிமேலும் சிரியா ரசாயன தாக்குதல் நடத்தினால் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும். இதற்காக அமெரிக்கா ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்று டிரம்ப் என்னிடம் கூறினார்.

எங்கள் அதிபர் ஒரு எல்லை வகுத்துள்ளார். அந்த எல்லையை தாண்டும் போது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஷிய ஐ.நா. தூதர் நெபன்சியா கூறும் போது, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களது அத்துமீறலை, அதிகாரத்தை காட்டி உள்ளன. இதன் மூலம் சர்வதேச சட்டத்தை மீறி உள்ளன என்று கூறினார்.

அதற்கு அமெரிக்க தூதர் நிக்கி காலே ரஷியாதான் தொடர்ந்து சர்வதேச சட்டங்களை மீறி வருகிறது. சர்வதேச சட்டங்களை மீறி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு ரஷியா உதவியாக இருந்து வருகிறது என்று கூறினார்.

சிரியா தூதர் ஜாபரி கூறும் போது, ரஷியாவும் அதன் கூட்டு நாடுகளும் நாங்கள் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்துவதாக பொய் தகவல்களை வெளியிடுகின்றன.

அவர்கள் மற்ற நாடுகளை தங்கள் காலனி நாடுகள் போல் பாவித்து அடக்கு முறையை கையாள்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு