பாபர் ஏவுகணை சோதனை;பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது
இந்திய நகரங்களை குறிவைக்கும் வகையில் சுமார் 700 கிமீ இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே வடிவமைத்து, மேம்படுத்தப்பட்டது.
அதிநவீன காற்றியக்கவியல் மற்றும் மின்னணுவியல் முறைகளை கொண்டிருப்பதால் தரை மற்றும் கடலில் உள்ள எவ்வித இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
பல்வேறு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில் பறப்பதோடு சில வகை ஸ்டெல்த் அம்சங்களையும் கொண்டுள்ளது. GPS வழிகாட்டுதல் இல்லாமலும் இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும்படி பல்வேறு ஊடுருவல் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாபர் ரக ஏவுகணைகள் பாகிஸ்தானிற்கு பாதுகாப்பு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என அந்நாட்டு ராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனையின் போது பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.
ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் உசேன் மற்றும் பிரதமர் ஷாகித் கான் அப்பாசி ஆகியோர் ஏவுகணையை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.