ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டது எப்படி? விசாரணை நடத்தும்படி அமைச்சர்களே கடும் அழுத்தம்..
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக முழு அளவிலான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சரான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மதுபானக் கடைகளை திறக்க கலால் ஆணையர் தெரியாமல் உத்தரவிட்டார் என்று கருதுவதை ஏற்க முடியாது என தெரிவித்த அவர், இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு ஊடகங்கள் மூலமே தெரிய வந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், உடனடியாக விசாரணை முன்னெடுக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு இருக்கும் போது மதுக்கடைகளைத் திறப்பது பொருத்தமானது என என்னால் கூற முடியாது என்றும் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவுச் செய்ய கட்டுப்பாடுகள் உள்ள நேரத்தில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்றார். நிதி அமைச்சிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் என்ன தவறு நடந்தது என்பது குறித்து முழு அளவிலான விசாரணை
முன்னெடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொண்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.