ஓகி புயல்.. மரங்கள் சாய்ந்தன.. மின்சாரம் துண்டிப்பு.. கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கும் மழை.!
தென் தமிழகத்தை ஓகி புயல் மிரட்டி வருகின்றது. இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
புதியதாக ஓகி புயல் உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது நிலப்பகுதிக்கு வராமல் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் செல்லும்.
இந்நிலையில், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், கனமழை பெய்து வருவதாலும் காற்று வேகமாக வீசி வருவதால் மரங்கள் ஆங்காங்கே முறிந்து சாலைகளில் விழுந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்னும் இந்த மழையானது 2 நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.