மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் நோயாளர்கள்..! கட்டில் இல்லாமல் தரையில் உட்கார்ந்திருக்கும் நோயாளிகள், ஆங்கில ஊடகம் வெளிப்படுத்திய தகவல்..
நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தினசரி அதிகரிக்கும் நிலையில் சில மருத்துவ மனைகளில் பாரிய இடப்பற்றாக்குறை உருவாகியுள்ளதாக ஆங்கில ஊடாகமான டெய்லி மிரர் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரம் அரசமருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட பத்திரிகையாளர் அங்குள்ள நோயாளர்களின் நிலைமையை காண்பிக்கும் படங்களை வெளியிட்டதை தொடர்ந்து
சமூக ஊடகங்களில் கரிசனைகள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட பத்திரிகையாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் கட்டில்கள் இன்மையால் பத்திரிகையாளர் நிலத்தில் இருக்கவேண்டிய நிலைமையேற்பட்டது, பல நோயாளிகள் நிலத்தில் மெத்தையில் அல்லது பாய்களில் உறங்குவதை காண்பிக்கும் படங்களை அவர் வெளியிட்டார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றவேளை இது குறித்து உரிய அதிகாரிகளிற்கு அறிவிப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச உறுதியளித்தார்.
இந்த நோயார்களிற்கு கட்டில் வசதிகளை வழங்கமுடியும் என அவர் தெரிவித்தார். பின்னர் குறிப்பிட்ட பத்திரிகையாளர் மத்துகமவில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டார்
ஆனால் நேற்று காலை பல நோயாளிகள பாணந்துறை மருத்துவமனையில் கட்டில்கள் அற்ற நிலையில் காணப்படுகின்றனர்.
இது குறித்து டெய்லி மிரர் பாணந்துறை வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியர் இந்திராணி கொடகண்டவை தொடர்புகொண்டு கேட்டவேளை அவர் தனது மருத்துவமனை நிலைமையை உரியவிதத்தில் கையாள்கின்றது என தெரிவித்தார்.
கொவிட் 19 நோயாளிகளிற்கு புதிய கட்டில்கள் குறித்து தங்களிற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் கொரோனா வைரசிற்கு எதிரான முன்னிலை வீரர்கள் என வர்ணிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் அதிகரித்துவரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாதவர்களாக காணப்படுகின்றனர்.
என அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.சுகாதார பணியாளர்கள் நோயாளர்களின் எண்ணிக்கையால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டனர்,
அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர், கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு நாட்டிற்கு உறுதியான
தீர்வே அவசியம் என சங்கத்தின் தலைவர் சமந்த கோரல ஆராச்சி தெரிவித்தார்.