25 வருடங்களின் பின் திறக்கப்படுகிறது மட்டக்களப்பு விமான நிலையம்!
மட்டக்களப்பு விமான நிலையம் சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை(25) சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
கடந்த 25 வருடங்களாக இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டிலிருந்த மட்டக்களப்பு விமான நிலையத்தை கடந்த- 2016 ஆம் ஆண்டு மே மாதம்-31 ஆம் திகதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது.
இதன் பின்னர் சிவில் விமானப் போக்குவரத்துக்கான செயற்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக 1400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
46 மீற்றர் அகலமும்,1066 மீற்றர் நீளமும் கொண்டதாக குறித்த விமானநிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பட்டுள்ளது.
நாளை பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து இரத்மலானை விமான நிலையத்துக்கு உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிக்கப் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.