உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்தியா - இலங்கை இடையே இணக்கம்!
இலங்கை- இந்தியாவிற்கு இடையில் நிகழ்நேர உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இரு நாட்டு காவல்துறை தலைவர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மெய்நிகர் கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு ஆக்கபூர்வமான சூழலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் ஒரு அடையாளமாகும் என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய தூதுக்குழுவிற்கு அந்நாட்டு புலனாய்வுப் பணிப்பாளரும், இலங்கை தூதுக்குழுவிற்கு பொலிஸ்மா அதிபரும் தலைமை தாங்கினார்.
இரு நாடுகளுக்கிடையேயான குறுகிய கடல் வழியைப் பயன்படுத்திக் கொள்ளும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. அத்துடன், நிகழ்நேர உளவுத்துறை தகவல் பகிர்வின் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே, உலகளாவிய பயங்கரவாத குழுக்கள் மற்றும் தப்பியோடியவர்கள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கூட்டாக செயல்படுவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும் தற்போதுள்ள ஒத்துழைப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும் இந்த கலந்துரையாடலின் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.