SuperTopAds

உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டா மிருகம் மரணம்

ஆசிரியர் - Admin
உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டா மிருகம் மரணம்

உலகின் காண்டா மிருகங்களின் இனம் அழிந்து வருகிறது. சீனாவில் காண்டா மிருகங்களின் கொம்புகள் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே அவை வேட்டையாடி அழிக்கப்பட்டன. ஏமனில் 1970 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் காண்டாமிருகங்கள் வேட்டையாடி கொல்லப்பட்டன.

உகாண்டா, மத்திய ஆப்பிரிக்க நாடுகள், சூடான் மற்றும் காட் போன்ற நாடுகளில் வாழும் அரிய வெள்ளை நிற காண்டா மிருகங்கள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டன.

இதுபோன்று அழிந்த வெள்ளை காண்டா மிருகத்தின் கடைசி ஆண் காண்டா மிருகம் கென்யாவில் லைகிபியா வன சரணாலயத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

45 வயதான அந்த காண்டாமிருகம் முதிர்ச்சியின் காரணமாக நோய் வாய்ப்பட்டது. அதை காப்பாற்ற உலகில் உள்ள கால்நடை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் அந்த காண்டா மிருகம் நேற்று பரிதாபமாக இறந்தது. ‘சூடான்’ என பெயரிடப்பட்டிருந்த அந்த காண்டாமிருகம் கடந்த 1973-ம் ஆண்டு தெற்கு சூடானில் உள்ள ‘ஷாம்பே’ வன சரணாலயத்தில் பிறந்தது.

இந்த காண்டா மிருகம் பிறந்த போது மொத்தம் 700 வெள்ளை காண்டா மிருகங்கள் இருந்தன. தற்போது அவை கொன்று அழிக்கப்பட்டு விட்டன.

தற்போது வெள்ளை காண்டா மிருகம் ‘சூடான்’ இறந்ததை தொடர்ந்து உலகில் 2 பெண் வெள்ளை காண்டா மிருகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

இறந்த மிருகத்தின் உயிரணுக்களை விஞ்ஞானிகள் சேகரித்து பாதுகாத்து வருகின்றனர். இதன் மூலம் உயிருடன் இருக்கும் பெண் வெள்ளை காண்டா மிருகங்களுக்கு செயற்கை கருவூட்டல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்மூலம் அழிவில் இருந்து வெள்ளை காண்டா மிருகத்தை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.