கண்டலடி துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வு!
மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்தில் தேசிய மாவீரர் தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது வீரமரணம் எய்திய மாவீரர்களுக்கு மூன்று நிமிடம் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து வாகரைப் பிரதேசத்தின் மாவீரரின் தாய் ஒருவரினால் மாவீரர் ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், பின்னர் கலந்து கொண்ட அனைவராலும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வாகரைப் பிரதேசத்தில் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் பத்து வருடங்களுக்கு பின்னர் இடம்பெறும் தேசிய மாவீரர் தினத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சா.வியாளேந்திரன், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சுரேஸ், ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆ.ஜெகன் உட்பட பல அரசியல் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.