SuperTopAds

ஒரு அங்குலம் நிலத்தைகூட விட்டுக் கொடுக்க மாட்டோம்

ஆசிரியர் - Admin
ஒரு அங்குலம் நிலத்தைகூட விட்டுக் கொடுக்க மாட்டோம்

சீனாவில் ஒருவர் 2 தடவை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற நிலையில் பாராளுமன்றத்தில் சட்ட திருத்ததின் மூலம் ஜனாதிபதி சி ஜின்பிங் சமீபத்தில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையுடன் ராணுவத்தின் முப்படைகள் உள்பட நாட்டின் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசம் வைத்துள்ள சி ஜின்பிங் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மாசே துங்குக்கு அடுத்தபடியாக சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.

இந்த தேர்வுக்கு பின்னர் பாராளுமன்றத்தில் இன்று சுமார் அரை மணி நேரம் சி ஜின்பிங் காரசாரமாக உரையாற்றினார். என்னிடம் அதிகபட்ச அதிகாரங்கள் குவிந்து கிடந்தாலும் மக்களின் வேலைக்காரனாக எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என அவர் உறுதி அளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சி ஜின்பிங் பேசியதாவது:-

புத்தெழுச்சி மிக்க உயர்ந்த சீனா என்ற இடத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கு நவீனகாலத்தில் இருந்தே நமது நாட்டின் மிகப்பெரிய கனவாக இருந்து வந்துள்ளது. நமது நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தைகூட யாராலும் பிரித்துவிட முடியாது என்பதில் சீனாவும் இந்நாட்டின் மக்களும் மிக உறுதியாக உள்ளனர்.

நமது இறையாண்மை மற்றும் எல்லைப்பகுதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றை பாதுகாத்து தாய்மண்ணின் முழுமையை பாதுக்காத்துத்தீர வேண்டும். இதுவே சீன மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

நமது வரலாறு மற்றும் நாட்டை பிளவுப்படுத்த நினக்கும் சக்திகள் தோல்வியை தழுவும். இத்தகைய செயல்கள் மக்களின் எதிர்ப்பை சந்திப்பதுடன் வரலாற்றில் உரிய தண்டனையையும் பெறும், பிரிவினைவாத சக்திகளை எதிர்கொண்டு வெற்றிபெறும் நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் சீன மக்களிடம் உண்டு.

அசைக்க முடியாத சக்தியாகவும், உறுதி மிக்கவர்களாகவும் சீன மக்கள் இருந்து வந்துள்ளனர். அந்த பழங்கால நம்பிக்கையை புதுப்பிக்கும் வகையில் நமது சுதந்திரத்தை பாதுகாக்க நமது எதிரிகளுடன் மோசமாக போரை நடத்தவும் நாம் உறுதி ஏற்றுள்ளோம்.

உலகில் நமக்கு தகுந்த இடத்தை உருவாக்கும் வகையில் வலிமைவாய்ந்த சக்திகளை நாம் பெற்றுள்ளோம். இந்த பெரிய கனவுக்காக கடந்த 170 ஆண்டுகளாக நாம் போராடி வந்துள்ளோம். சீனாவுக்கு புத்தெழுச்சி ஊட்டும் அந்த கனவுக்கு இன்று மிக நெருக்கமாக சீன மக்கள் உள்ளனர்.

சுமார் 130 கோடி மக்கள் சுமந்திருக்கும் அந்த கனவு விரைவில் மெய்யப்படும் வகையில் செயலாற்றுவேன் என நான் உறுதி அளிக்கிறேன்.

எல்லைகளை விரிவுப்படுத்தும் நோக்கமோ, மேலாதிக்கம் செலுத்தும் எண்ணமோ சீனாவுக்கு கிடையாது. இதுபோன்ற பழக்கம் உள்ளவர்கள்தான் மற்றவர்களை அச்சுறுத்தலாக நினைப்பார்கள்.

எங்களது விருப்பத்தை பிறமக்களின் மீது நாங்கள் திணிக்க மாட்டோம். அண்டை நாடுகளுடனும், உலகின் இதர நாடுகளிடனும் நட்புறவை பலப்படுத்துவதன் வாயிலாக சீனாவின் சீரமைப்பின் மூலம் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் பயனடையும் வகையில் நாங்கள் செயல்படுவோம்.