பேஸ்புக் நிறுவன ரகசியங்களை திருடும் கும்பலை துப்பறிய இந்திய பெண்ணை அனுப்பிய மார்க்!
பேஸ்புக் நிறுவன ரகசியங்களை வெளியிடும் திருட்டு கும்பலை கண்டுபிடிக்க இந்திய பெண்ணின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. சோனியா அவுஜா என்ற இந்திய பெண்ணின் தலைமையில் துப்பறியும் குழுவை நேற்று உருவாக்கி இருக்கிறார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க். அந்நிறுவன அதிகாரிகள் அனைவரையும் இவர் விசாரிக்க இருக்கிறார். பேஸ்புக்கில் நடக்க இருக்கும் மாற்றங்களை முன்கூட்டிய அந்நிறுவன ஊழியர்கள் சிலர் போட்டோ எடுத்து போட்டி நிறுவனங்களுக்கு அளிப்பதாக புகார் எழுந்து உள்ளது. இதை கண்டுபிடிக்கவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
கசிகிறது
பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த சில மாதங்களாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது. அந்த நிறுவனம் எந்த ஒரு பொருள் குறித்து விவாதம் செய்தாலும் அது உடனடியாக போட்டி நிறுவனங்களுக்கு தெரிந்துவிடுகிறது. அவர்களின் எதிர்கால திட்டங்கள் கூட போட்டி நிறுவனங்களுக்கு கசிந்து இருக்கிறது. இது எப்படி செல்கிறது என்று தெரியாமல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் குழம்பி வந்தார்.
எப்படி செல்கிறது
பேஸ்புக்கில் நடக்கும் அலுவலக கூட்டங்களில் மூலம் இந்த தகவல் வெளியாவது கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் பேஸ்புக் தங்கள் டைம்லைன் கொள்கைகளை மாற்றியது. இந்த விஷயம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் முன் பேஸ்புக் மீட்டிங்கில் பேசியதை வைத்து யாரோ வெளியே தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்தியாவை சேர்ந்த பெண்
தற்போது இதை கண்டுபிடிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. மார்க் ஏற்கனவே இதுகுறித்து எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது சோனியா அவுஜா என்ற இந்திய பெண்ணின் தலைமையில் துப்பறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடத்துவார்
மார்க்கிற்கு மிகவும் நம்பகமான பெண் சோனியா என்று கூறப்படுகிறது. இவர் ஒவ்வொரு ஊழியரின் ஃபோனையும் வாங்கி சோதனை நடத்த இருக்கிறார். எதிர் நிறுவன ஆட்களுடன் அவர்கள் பேசி இருக்கிறார்களா என்று சோதனை செய்ய இருக்கிறார்.