பிரிட்டன் : ரஷ்ய உளவாளியை பாதித்த விஷம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை
முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கி ஸ்கிரிபாலையும், அவரது மகள் யூலியாவையும் சாலிஸ்பர்ரி நகரில் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்து எப்படி வந்தது என்பதை கண்டுபிடிப்பதில் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.
சாலிஸ்பர்ரி நகரில் பென்ச் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இவர்கள் இருவரும் இன்னும் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்களோடு இருக்கின்ற ஒரு போலீஸ் அதிகாரிதான் மக்களோடு பேசி கொண்டிருக்கிறார். ஆனால், நிலைமை மிகவும் மோசமாகவே இருப்பதாக பிரிட்டன் உள்துறை அமைச்சர் தெரிவிக்கிறார்.
இந்த சம்பவத்திற்கு பிரிட்டனின் மறுமொழி மென்மையாக இருக்காது என்று அமைச்சர் அம்பர் ராட் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனின் தெருக்களில் நடைபெறும் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெளிவுப்படுத்தி கொள்ள விரும்புகிறேன் என்று அவர் ரேடியோ 4இல் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.
உளவாளியான செர்கி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கிற விஷத்தை பயன்படுத்தி இருப்பதாக அரசு விஞ்ஞானிகள் இனம்கண்டுள்ளனர்.
ஆனால், தற்போதைய நிலையில் இந்த தகவலை பொதுவாக அறிவிக்கப் போவதில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
சிரியாவில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சரின் வாயுவை மற்றும் 1995ம் ஆண்டு டோக்கியோ நகர ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை விட அரிய விஷமாக இது இருப்பதாக இந்த விசாரணையில் மிகவும் தொடர்புடைய வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு மலேசியாவில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட 'விஎக்ஸ்' நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷம் போல இது இல்லை என்று கூறப்படுகிறது.
66 வயதான செர்கே ஸ்கிரிபால், MI6க்கு ராணுவ ரகசியங்களை விற்றுவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்றிருந்தார். ஆனால், 2010ம் ஆண்டு "உளவாளிகளை திரும்ப ஒப்படைத்தல்" என்ற ஒப்பந்தத்தால் விடுவிக்கப்பட்டு பிரிட்டனில் தஞ்சமடைந்தார்.