கிணற்றுக்குள் விழுந்து நான்கு மாணவிகள் தற்கொலை..!
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ராமாபுரம் பகுதியில் காணாமல் போன 4 மாணவிகளில், மூவரின் சடலங்கள் விவசாயக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
பணப்பாக்கத்தைச் சேர்ந்த தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகளும் ராமாபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்புப்படித்து வந்தனர். மாணவியர் நான்கு பேரும் பள்ளியில் இருந்து திடீரென காணாமல் போயினர்.
இவர்களில் மூன்று பேரது பைகள் மட்டும் பள்ளி வகுப்பறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயக் கிணற்றின் அருகே இரண்டு சைக்கிள்களும், ஒரு பையும் இருப்பதைப் பார்த்த சிலர் சந்தேகமடைந்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விவசாயக்கிணற்றுக்குள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் தீபா, சங்கரி உள்ளிட்ட 3 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. காணாமல் போன மேலும் ஒரு மாணவியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. காணாமல் போன மாணவியரில் ஒருவரான மனிஷா, பள்ளியில் ஆசிரியர் திட்டியதாக வீட்டில் பெற்றோரிடம் புகார் செய்ததாக கூறப்படுகிறது.