தினமும் ஐந்து மணிநேரம் போர் நிறுத்தம்: - ரஷ்யா ஜனாதிபதி உத்தரவு
சிரியாவின் கிழக்கு கௌட்டா பகுதியில் நடந்துவரும் கடுமையான உள்நாட்டுப் போரை தினமும் 5 மணிநேரம் நிறுத்திவைக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011–ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது.
ஒருவார காலம் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு கௌட்டா பகுதி மீது அதிபர் ஆதரவு படைகள் நடத்திய கடும் தாக்குதலில் 700–க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர், இதில் ஏராளமான குழந்தைகளும் கொல்லப்பட்டது கொடூரத்தின் உச்சம் ஆகும்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கிழக்கு கௌட்டா பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் Sergei Shoigu சிரியா நாட்டு நேரப்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தினமும் 5 மணி நேரம் பொதுமக்கள் வெளியேறுவதற்கு உதவியாக தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இதையடுத்து பொதுமக்கள் தப்பிசெல்வதற்கு செஞ்சிலுவை சங்கம் உதவும் எனவும் இதை பற்றி துண்டுபிரசுரங்கள், குறுஞ்செய்தி மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடுமையான போர் நடைபெற்றுவரும் சிரியாவின் கிழக்கு கௌட்டா பகுதியில் 4,00,000 பொதுமக்கள் அகப்பட்டுள்ளனர், இவர்களுக்கு அடிப்படை மருத்துவ மற்றும் உணவு உதவிகள் எதுவும் இல்லை, மேலும் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் இங்கு 30க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.