பதவியை இராஜினாமா செய்தார் முகாபே; ஆரவாரத்தில் குதிக்கும் ஸிம்பாவே!
சிம்பாவே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே, தன் பதவியை இராஜினாமா செய்துள்ளததைத் தொடர்ந்து, சிம்பாவே வீதிகளில் அந்நாட்டு மக்கள் ஆரவார கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் பதவியில் இருந்து ராபர்ட் முகாபே விலகியுள்ள நிலையில், அவரது 37 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளமையையிட்டே, அந்நாட்டு மக்கள் வீதிகளில் கொண்டாடி வருகின்றனர்.
பதவியில் இருந்து விலகும் வரை 93 வயதாகும் முகாபேதான், உலக நாடுகளின் தலைவர்களிலேயே மிகவும் அதிக வயதானவராக இருந்தார்.
அவரது பதவி விலகல் அறிவிப்பால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அந்த செய்தியைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அவையிலே எழுந்து நடனமாடத் தொடங்கினர்.
அவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்கும் முன்பே அதை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், முன்னதாகவே கொண்டாட்டங்களுக்குத் தயாராகினர்.
தகவல் வெளியானதும் தெருக்களில் கூடியிருந்த மக்களும் வாகன ஓட்டிகளும் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு ஆடிப் பாடியும், வாகனங்களின் மீதும் ஏறி நடனமாடியும் கொண்டாடத் தொடங்கினர்.
முகாபே பதவி விலக வற்புறுத்திய இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களும், மக்களுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
இந்நிலையில், முகாபே தொடர்பான பல புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் கேலியாகப் பகிரப்பட்டு வருகின்றது.
2015-இல் ஒரு பொது நிகழ்வில் மேடையில் இருந்து முகாபே கீழே விழும் படமானது, அவர் ஜிம்பாப்வே எல்லையில் இருந்து தப்பி குதிப்பது போல மாற்றப்பட்டு பரவலாக சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
மேலும், நீங்கள் முன்னதாகவே தொடங்கி தாமதமாக முடித்துள்ளீர்கள் என்று கூறி அவரது இளம் வயதில் எடுகப்பட்ட படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. மற்றும் முகாபேவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்படும் என்று ஹாலிவுட் நடிகர் டான் சீடல் படத்தை வைத்து கேலியாக உருவாக்கப்பட்டுள்ள சுவரொட்டி ஒன்றையும் அந்த நடிகர் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.