பதவி விலகினார் ஜிம்பாப்வே அதிபர் முகாபே; அடுத்த அதிபர் மனைவியின் ஆதரவாளரா?
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார்.
இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும் என்பதற்காகத் தாமே எடுத்த முடிவு இது என முகாபே அக் கடிதத்தில் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
முகாபேவுக்கு எதிராக குற்றச்சாட்டு தீர்மானம் கொண்டுவருவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் தொடங்கிய நிலையில் இந்த ஆச்சரிய அறிவிப்பு வந்துள்ளது. இதனால், முகாபேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட பதவிநீக்க நடவடிக்கை இதனால் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியபிறகு, பதவியில் இருந்து விலக முகாபே மறுத்தார்.
ஜிம்பாப்வே 1980-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து முகாபே அதிபராக இருந்தார்.
இரு வாரங்களுக்கு முன்பு துணை அதிபர் எமர்சன் முனங்காக்வாவை முகாபே பதவி நீக்கியதில் இருந்தே அவருக்கு எதிராகப் பிரச்சினை தலையெடுத்தது.
முகாபேயின் விலகலைக் கேட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சிக் கூச்சல் எழுப்பினர். மக்கள் தெருக்களில் கூடிக் கொண்டாடினர்.