பிரித்தானிய சட்டத்தின் கீழ்பி ரியங்கவுக்கு எதிராக நடவடிக்கை: – கலம் மக்ரே
பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் இலங்கையின் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ செயற்பட்டமை, பிரித்தானிய சட்டத்தின் கீழ் குரோதத்தனமான குற்றமென சனல் 4 தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல ஆவணப்பட தயாரிப்பாளருமான கலம் மக்ரே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்க்கும் வகையில் நேற்று முன்தினம் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களால் கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.இதனை இலங்கை ராஜதந்திரிகள் தடுக்க முனைந்ததோடு, லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ கழுத்தில் கையை வைத்து அச்சுறுத்தும் பாணியில் சைகை காண்பித்ததாக ஒளிப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பிரித்தானிய சட்டத்தின் கீழ் இது குரோதத்தனமான குற்றமென தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கலம் மக்ரே, அந்நாட்டு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் நிலையில், பிரிகேடியரின் இச்செயல் அதனை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதென கலம் மக்ரே சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பிரகாரம் இலங்கை ராணுவ நீதிமன்றில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ நிறுத்தப்பட வேண்டுமென கலம் மக்ரே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வருபவர்களில் கலம் மக்ரேயும் ஒருவர். யுத்தக் களத்தில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான சம்பவங்களை சித்தரிக்கும் வகையில் இவர் தயாரித்த ஆவணப்படங்கள், இலங்கை மீதான சர்வதேச நாடுகளில் கவனத்தை அதிகரிக்கச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.