SuperTopAds

'இரண்டு நாட்களில் முகாபே நீக்கப்படுவார்'': ஆளும் கட்சியினர் உறுதி

ஆசிரியர் - Editor II
'இரண்டு நாட்களில் முகாபே நீக்கப்படுவார்'': ஆளும் கட்சியினர் உறுதி

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிரான குற்றச்சாட்டு நடவடிக்கைகளை ஆளும் சானு பி.எஃப் கட்சி செவ்வாய்கிழமை தொடங்க உள்ளது.

இதற்கான செயல்முறை நிறைவு செய்ய இரண்டு நாட்களுக்குள் ஆகலாம். புதன்கிழமையன்று முகாபே நீக்கப்படுவார் என சானு பி.எஃப் கட்சியின் உறுப்பினர் பால் மாங்வானா கூறியுள்ளார்.

முகாபேவின் மனைவி அரசை இயக்க எவ்வித உரிமையும் இல்லாதபோதும், அவர் அரசியலமைப்பு அதிகாரத்தை கைப்பற்ற முகாபே அனுமதித்தார் என அவர் கூறினார்.

முன்னதாக முகாபே பதவி விலக அளிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த நிலையில், சானு பி.எஃப் கட்சியினர் இம்முடிவை எடுத்துள்ளனர்.

பதவி விலக வேண்டும் என வலுத்துவரும் கோரிக்கையை நிராகரித்திருந்தார். அடுத்த சில வாரங்களுக்கு தொடர்ந்து பதவியில் இருப்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

தொலைக்காட்சி நேரலையில் பேசிய அதிபர் முகாபே, டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தை தலைமையேற்று நடத்துவேன் என்று தெரிவித்தார்.

அவரின் சானு பி.எஃப் கட்சி, அவரை கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்கியதோடு, அதிபர் பதவியிலிருந்து விலக 24 மணிநேரத்திற்கு குறைவான கெடு அளித்திருந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, தனக்கு அடுத்த பதவியில் இருந்த எமர்சன் மனங்காக்வாவை, முகாபே பதவி நீக்கம் செய்ததை தொடர்ந்து இந்த நெருக்கடி உருவானது.

முகாபேவிற்குப் பிறகு அவரின் மனைவியை அதிபராக்கும் நடவடிக்கையாக இதை, ராணுவ தலைவர் பார்த்தார்.