SuperTopAds

அமெரிக்க துணை அதிபருடன் ஒலிம்பிக்ஸ் விழாவில் கலந்துகொள்வாரா வட கொரிய அதிகாரி?

ஆசிரியர் - Editor II
அமெரிக்க துணை அதிபருடன் ஒலிம்பிக்ஸ் விழாவில் கலந்துகொள்வாரா வட கொரிய அதிகாரி?

குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது இரு நாடுகள் இடையிலான பதற்றங்களை குறைக்கும் விதமாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது உயர்மட்ட அதிகாரியை தென் கொரியாவுக்கு அனுப்ப உள்ளது வட கொரியா.

வட கொரியாவின் விழாக் குழு தலைவரான கிம் யோங்-நாம், 22 உறுப்பினர்கள் கொண்ட வட கொரிய குழுவை தலைமை தாங்குகிறார் என்றும், வெள்ளிக்கிழமை அவர்கள் தென் கொரியாவுக்கு பயணம் செய்வார்கள் என்றும் தென் கொரிய ஒற்றுமை அமைச்சகம் கூறியுள்ளது.

போட்டிகளின் தொடக்க விழாவின் போது, இரு நாட்டு வீரர்களும் ஒரே கொடியின் கீழ் அணிவகுக்க உள்ளனர்.

குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்வது, வட கொரியாவின் இராஜதந்திர மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

தனது அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால், சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும், தடைகளையும் வட கொரியா எதிர்கொண்டுள்ளது.

ஐக்கிய கொரிய பெண்கள் பனி ஹாக்கி அணி, ஞாயிற்றுக்கிழமையன்று தனது முதல் போட்டியை விளையாடியது. ஸ்வீடன் உடன் நடந்த இந்த நட்பு போட்டியில், கொரிய அணு 1-3 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.

இது, புதிதாக உருவாக்கப்பட்ட கொரிய அணியின் முதல் மற்றும் பயிற்சி போட்டியாகும்.

நான்கு வருடங்களில், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் வட கொரியாவின் உயர்மட்ட அதிகாரியாக கிம் யோங்-நாம் உள்ளார்.

கொரிய உறவுகளை மேம்படுத்துவதற்காக வடகொரியாவின் விருப்பங்களை இது பிரதிபலிக்கிறது எனத் தென் கொரிய அதிபர் அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெள்ளிக்கிழமையன்று நடக்க உள்ள போட்டிகளின் தொடக்க விழாவில், வட கொரிய அதிகாரி கிம் யோங்-நாம் கலந்துகொள்வாரா என்பதைத் தென் கொரிய ஒற்றுமை அமைச்சகம் கூறவில்லை.

அப்படி அவர் கலந்துகொண்டால், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் உடன் கலந்துகொள்ள வேண்டியதாக இருக்கும்.

15 மாதங்களுக்கும் மேலாக வடகொரியாவில் சிறைவைக்கப்பட்டிருந்து, அமெரிக்க திரும்பிய சில நாட்களில் உயிரிழந்த அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியரின் தந்தை, பிரெட் வார்ம்பியர் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துக்கொள்கிறார் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.