SuperTopAds

மட்டு. சமுர்த்தி வங்கிகளில் இடம்பெறும் நிதி மோசடிகக்கு உடந்தையான உயர் அதிகாரிகள்.

ஆசிரியர் - Admin
மட்டு. சமுர்த்தி வங்கிகளில் இடம்பெறும் நிதி மோசடிகக்கு உடந்தையான உயர் அதிகாரிகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் சமுர்த்தி வங்களில், உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிதிமோசடிகள் தொடர்பாக உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாது, வாய்மூடி மௌனீகளாக இருப்பதாக சமூர்த்தி பயனாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற ஏழை மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் பல்வேறுவகையான உதவித் திட்டங்களை சமுர்த்தித் திட்டத்தினுடாக நடைமுறைப்படுத்திவருகிறது.

சமுர்த்திப் பயனாளிகளின் பெயர் விபரங்கள் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதிக்கு முன்னர் சமுர்த்தி வங்கிகளினால் தலைமையகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதற்கமைவாக சமுர்த்தி தலைமையகத்தினால் 12ஆம் திகதிக்கு முன்பாக வங்கிகளுக்கு பணம் வைப்பிலிடப்படுகிறது. ஆனால் பயனாளிகளுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுகிறது. இப்பணம் வட்டிவருமானம் பெறும் பொருட்டு வேறு ஒரு தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டுவருவதாக தெரியவருகிறது.

அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களினால், சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்கள் (வீட்டுத் திட்டம் உட்பட) சமுர்த்தி வங்களினுடாக பரிமாற்றப்படும் பணம் மற்றும் பயனாளிகளின் சேமிப்புப் பணம் என்பன சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வங்கியில் பணிபுரியும் ஊழியர்களினால் மோசடி செய்யப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கூட படுவான்கரை பகுதியான செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் கரடியனாறு சமுர்த்தி வங்கியில், அதிகாரிகள் பொதுமக்கள் பெயரில்; பல மில்லியன் (2500000.00) ரூபா கடன்கள் பெற்று பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இம்மோசடி தொடர்பாக வங்கியில் கடமையாற்றும் மோசடியில் ஈடுபட்டவர், தன்னால் மட்டும் மேற்கொள்ள படவில்லை முகாமையாளர் உட்பட அனைவரும் இதில் பங்குதாரர் என எழுதப்பட்ட முறைப்பாட்டுக் கடிதத்தை கையளித்திருந்தார். எனினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனை மூடிமறைக்க வங்கி முகாமையாளர்; முயன்றுள்ளார். ஆனால் விடயம் பெரிதாகியதையடுத்து, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருக்கு பாரிய அன்பளிப்பு தொகை வழங்கப்பட்டு, விசாரணையின்றி அவரால் மறைக்கப்பட்டதாக தெரியவருகிறது. மோசடிக்கு உடந்தையாகவும், பங்குதாரர்களாகவும் உள்ளவர்களை பிரதேச செயலாளர் மற்றுமல்ல, மாவட்ட அரசாங்க அதிபர் கூட இதனை கவனத்தில் கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேபோன்று, வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாங்கேணி சமுர்த்தி வங்கியில் கடமை புரிந்த உத்தியோகத்தர்கள் சேர்ந்து பாரிய நிதி (2040000 ரூபா) மோசடியில் ஈடுபட்டு இருவருடங்கள் கடந்த போதும், இதுவரைக்கும் குறித்த மோசடியை மேற்கொண்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வங்கியில் பொதுமக்களின் பெயரில் சேமிப்பிலிருந்த பணம் மோசடி இடம்பெற்றால், 12ம் இலக்க வங்கிக் கையேடு அரச சுற்றுநிருபத்தின் பிரகாரம் கடமை நிறைவு செய்து வீடு திரும்புவதற்கு முன்பு குறித்த வங்கியில் கடமையிலுள்ள முகாமையாளர் உட்பட அனைவரும் மோசடி செய்யப்பட்ட பணம் அனைத்தையும் மீளச் செலுத்திவிட்டுதான், செல்ல வேண்டும் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு, மண்முனைப்பற்ற பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழங்குடா சமுர்த்தி வங்கியிலும் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இதுவரைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிதிக்குற்றம் இழைத்தவர்கள் மீது விசாரணைக்கென நியமிக்கப்படும் விசாரணைக்குழுக்களும் இதனை கிடப்பில் போடுகிறது. அத்துடன், மாவட்ட அரசியல்வாதிகளின் அழுத்தம் கொடுப்பதனால் நிதிமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நீதியான, சுயாதீனமான விசாரணை மேற்கொள்வதற்கு முடியாதவாறு மாவட்ட நிலவரம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தது..