ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு - விசாரணை இன்று ஆரம்பம்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை மீதான வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு பிள்ளையான் உள்ளிட்ட ஆறு பேரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசன்துரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் நீதிமன்று ஊடாக செல்லும் பிரதான வீதியும் மூடப்பட்டிருந்தது. இன்றைய அமர்வில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான எம்.என்.அப்துல்லாவும் மேல் நீதிமன்றுக்கு சமூகமளித்து சாட்சியங்களை பதிவு செய்தார்.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் காலை 10.30 மணி தொடக்கம் இந்த வழக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற நிலையில் நீதிபதி எம்.என்.அப்துல்லாவிடம் ஆறு மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளையும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. இந்த விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து வருகைதந்த சட்டத்தரணிகளும் கலந்து கொண்டனர்.