SuperTopAds

'வன்னி தலைவர்' என விளித்த 'மனோ'- சுட்டிக்காட்டிய 'வினோ' மீது பாய்ச்சல்!

ஆசிரியர் - Admin
'வன்னி தலைவர்' என விளித்த 'மனோ'- சுட்டிக்காட்டிய 'வினோ' மீது பாய்ச்சல்!

சஜித் பிரேமதாஸவின் வவுனியா பிரச்சார கூட்டத்தில், அமைச்சர் ரிசாட் பதியுதீனை, "வன்னி மாவட்ட தலைவர்" என்று கூறி விட்டேன் என சிலர் தன்னை விமர்சிப்பதாகவும், அமைச்சர் ரிசாட்டை "வன்னி மாவட்ட அமைச்சர்" என்று சொல்லவே வந்ததாகவும், ஆனால் அதற்கு பதில் "வன்னி மாவட்ட தலைவர்" என்ற வார்த்தை பிரயோகத்தை செய்து பொதுவாக விளித்தது, வன்னி பெருநில அரசியல் சூழலில் பொருத்தமானதில்லை என்பதை தான் தெளிவாக உணர்வதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இந்த மனோ கணேசனிடம் எப்போதும் இருக்கிறது. எனவே என் சொற்பிரயோகத்தில் தவறுதலாக ஏற்பட்ட தவறுக்கு மனம் வருந்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர் அமைச்சர் மனோ,

“வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி நண்பர் வினோ, எனது உரையின் இந்த முதல் ஒரு வரியை பிடித்துக் கொண்டு, "இது கோத்தாவுக்கு மறைமுக ஆதரவானது" என கூறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இவர் என் முழு உரையையும் கேட்கவில்லையா? சமீப காலத்தில் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் விமர்சிக்காத அளவுக்கு ராஜபக்ஷ குடும்பத்தை நான் எனது வவுனியா உரையில் விமர்சித்துள்ளேன்.

இதை கவனத்தில் எடுக்காமல் என் கருத்து "கோத்தாவுக்கு ஆதரவானது" என முட்டாள்தனமான கருத்து கூறுவதும், என் வரலாற்றை மறந்து என்னை அறிந்த இவர் இப்படி பேசுவதும் எனக்கு மன வருத்தத்தை தருகிறது.

இவரது கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இது நேரடியாகவே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வாக்குகளை சிறடிக்கிறது என்பதை இவரால் உணர முடியவில்லையே? அவருக்கு கடிதம் எழுதுவதை தவிர நண்பர் வினோவின் கட்சி என்ன செய்கிறது?

இந்நிலையில், சஜித் பிரேமதாச அணியின் பிரதான ஓரு பங்காளி கட்சி தலைவரான என்னை பார்த்து இப்படி சொல்ல நண்பர் வினோவுக்கு வெட்கமில்லையா?

இனி, நண்பர் வினோவை பார்த்து நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள் என நான் கேட்கலாமா?

வன்னி பெருநிலத்தின் முல்லை, வவுனியா, மன்னார் மாவட்ட பெரும்பான்மை தமிழ் மக்கள் இன்று நிர்க்கதி நிலையில் வாழ்கிறார்கள். அநாதரவான பெண்கள், முன்னாள் போராளிகள், இடம் பெயர்ந்தவர்கள், யுத்தத்தில் அவயங்களை இழந்தவர்கள், வேலையில்லாத இளையோர் என வழி காட்டல் இல்லாமல் வன்னி பெருநில தமிழ் மக்கள் தவிக்கிறார்கள். இந்நிலையில், முன்னாள் எம்பி நண்பர் வினோ முகநூலுக்குள் ஒளிந்து அரசியல் செய்கிறார்.” எனவும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.