SuperTopAds

வங்கதேசத்திற்கு தப்பி சென்ற ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்

ஆசிரியர் - Editor II
வங்கதேசத்திற்கு தப்பி சென்ற ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்

ரோஹிஞ்சா முஸ்லிம்களை கொன்றதாகவும், அவர்களின் கிராமங்களை எரித்துவிட்டதாகவும் மியான்மர் ராணுவம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பல லட்சக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்கு தப்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர்கள் தப்பி சென்றதையும், எல்லை தாண்டி வந்தோர் பெற்றிருந்த காயங்களையும் ஆவணப்படுத்துகின்ற புகைப்படங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சேகரித்திருக்கிறது.

துப்பாக்கியால் சுடப்பட்டதால் 11 வயது சிறுவனான அன்சார் அல்லாவின் காலில் பெரியதொரு காயம் ஏற்பட்டுள்ளது.

"எங்களுடைய வீடுகள் எரிந்து கொண்டிருந்த நிலையில், எங்கள் மீது தண்ணீரை தெளிப்பதுபோல, துப்பாக்கியால், குண்டுகளால் சுட்டனர்" என்று அவருடைய தாய் சமாரா தெரிவித்தார்.

"அது என்னுடைய ஆள்காட்டி விரலுக்கு பாதி அளவிலான துப்பாக்கி குண்டு. அதன் நான் தினம் தினம் நினைத்துப்பார்க்கிறேன். கடவுள் ஏன் எங்களை இத்தகைய ஆபத்தான நிலைமையில் வைத்துள்ளார்" என்று அவர் புலம்புகிறார்.

ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்

சகோதரர்களான முகமது ஹெரோனும், முகமது அக்தரும் தங்களுடைய உடல்களில் பயங்கரமான தீக்காயங்களை கொண்டுள்ளனர்.

மியான்மர் படைப்பிரிவுகள் அவர்களின் கிராமத்தின் மீது ராக்கெட் குண்டால் தாக்கியதில், அவர்களின் இரு குழந்தைகள் இறந்து விட்டதாக இந்த சகோதரர்களின் மாமா தெரிவித்தார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் மியான்மர் ராணுவம் வெளியிட்ட சர்வதேச புலனாய்வு ஒன்றில், ராணுவம் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால், "ஓர் இனப்படுகொலைக்கான பாடநூல் உதாரணம்" என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்த இந்த நெருக்கடியை பற்றி பிபிசி செய்தியாளர்கள் வைத்திருக்கும் சாட்சியத்திற்கு மியான்மர் ராணுவம் வெளியிட்ட சர்வதேச புலனாய்வு முரண்படுகி்றது.

ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்

தான் எழுந்தபோது, தன்னுடைய வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது என்கிறார் அன்வாரா பேகம். 36 வயதான அவர் மீது எரிந்து கொண்டிருந்த கூரை விழுந்தது. அவர் உடுத்தியிருந்த நைலான் துணி அவருடைய கையோடு உருகிபோயிருந்தது.

வங்கதேசத்திலுள்ள அகதிகள் முகாமை அடைவதற்காக அவரது கணவர் அன்வரா பேகத்தை எட்டு நாட்கள் தூக்கி சுமந்து வந்தார்.

"நான் சாகப்போகிறேன் என்று நினைத்தேன். என்னுடைய குழந்தைகளுக்காக வாழ வேண்டுமென எண்ணுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்

தன்னுடைய கிராமத்தில் மத போதனை கற்பிக்கும் இஸ்லாமிய பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது, 3 பேர் தன்னை கத்தியால் தாக்கியதாக 42 வயதாகும் இம்ரான் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

அடுத்த நாள், அவர் தன்னுடைய மனைவியையும். இரண்டு குழந்தைகளையும் பிற கிராம மக்களோடு வங்கதேசத்திற்கு தப்பி செல்ல செய்துள்ளார்.

பின்னர் அவரும் காஸ் பஜாரை சென்றடைந்தார். இன்னும் தன்னுடைய குடும்பத்தினரை கண்டடைய இருக்கும் நிலையில், இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

ரோஹிஞ்சாக்களை ஏன் காயப்படுத்துகிறீர்கள் என்று மியான்மர் அரசை நான் கேட்க விரும்புகிறேன்? பௌத்தர்களாக நீங்கள் ஏன் எங்களை வெறுக்கிறீர்கள்? ஏன் எங்களை சித்ரவதை செய்கிறீர்கள்? எங்கள் மீது என்ன தவறு கண்டீர்கள்?" என்று அவர் கேள்விகளை அடுக்குகிறார்.

ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்

இந்த நெருக்கடி தொடர்பாக சுதந்திரமான புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் தில்லர்சன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

பல சாட்சியங்களின் பதிவுகளில் இருந்து, மியான்மர் ராணுவம் தன்னை வெளிக்காட்டி கொள்வது முரண்படுகிறது. நுர் கமால் தன்னுடைய தலையில் ஆழமான காயம் உள்ளது.

அவர் தன்னுடைய வீட்டில் மறைந்து இருந்தபோது, தன்னை சிப்பாய்கள் தாக்கியதில் இந்த காயம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

முதலில் துப்பாக்கி கைமுனையாலும், பின்னர் கத்தியாலும் அவர்கள் என்னை தாக்கினார்கள்" என்று 17 வயதாகும் அவர் நினைவுகூர்கிறார்.

ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்

பிற அகதிகளோடு சேர்ந்து அபு ரஹ்மான் மறைந்திருந்து தாக்கப்பட்டார். தாக்குதல்தாரிகள் அரிவாளை அவர்களை நோக்கி எறிந்ததில், அவருடைய 3 கால் விரல்கள் துண்டிக்கப்பட்டன. மேலும், 2 மணிநேரம் நடந்து சென்ற அவரை, உறவினரும், நண்பர்களும் சுமந்து எல்லையை கடந்து கொண்டு சென்றனர்..

"எங்களின் எதிர்காலம் நல்லதாக இல்லை" என்று கூறும் அவர், "அல்லா எங்களுக்கு உதவ வேண்டும், சர்வதேச சமூகம் ஏதாவது செய்ய வேண்டும்" என்கிறார்.

ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்

30 வயதாகும் மும்தாஜ் பேகத்தின் கிராமத்திற்கு வந்த சிப்பாய்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக அவர் கூறுகிறார்.

நான் ஏழை என்றும், என்னிடம் எதுவும் இல்லை என்றும் அவர்களிடம் கூறினேன்.

"உன்னிடம் பணம் இல்லை என்றால், நாங்கள் உன்னை கொல்வோம்" என்று கூறி அவர்களில் ஒருவர் என்னை அடிக்க தொடங்கினார்.

பின்னர் அவரை வீட்டில் போட்டு பூட்டிய அவர்கள், வீட்டின் கூரையில் தீ வைத்தனர். இறுதியில், அவர் தப்பியபோது, தன்னுடைய 3 மகன்கள் இறந்து கிடப்பதையும், தன்னுடைய மகள் அடிக்கப்பட்டு ரத்தத்தில் மிதப்பதையும் கண்டார்,

எங்களுக்கு இப்போது உணவு, வீடு, குடும்பம் எதுவும் இல்லாத நிலையில், எதிர்காலம் பற்றி நான் என்ன செல்வது? எதிர்காலம் பற்றி எங்களால் நினைத்து பார்க்க முடியவில்லை. அவர்கள் எங்களின் எதிர்காலத்தையும் கொன்றுவிட்டார்கள்