SuperTopAds

அர்ஜென்டினா: காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் செயற்கைகோள் சிக்னல் கிடைத்தது

ஆசிரியர் - Editor II
அர்ஜென்டினா: காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் செயற்கைகோள் சிக்னல் கிடைத்தது

மூன்று நாட்களாக தொடர்பாடலை இழந்துவிட்ட 44 ஊழியர்களை கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியை அர்ஜென்டினா கடற்படை தென் அட்லாண்டிக்கில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது சிக்னல் கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன கப்பலில் இருந்து வந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால், கப்பலில் இருந்த 44 பேர் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

கடற்படையோடு கடைசியாக கடந்த புதன்கிழமை காலை நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பு கொண்டுள்ளது.

சனிக்கிழமை ஏழு தோல்வியுற்ற செயற்கைக்கோள் அழைப்புகள் அர்ஜென்டினா கடற்படைக்கு வந்தது. தற்போது, அந்த அழைப்புகள் செய்யப்பட்ட இடத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் 430 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் சன் குவான் என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது.

கப்பலை கூடிய சீக்கிரம் கண்டுபிடிப்பதற்கு உதவ தேசிய மற்றும் சர்வதேச ஆதாரங்கள் அனைத்தும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிபர் மௌரீசியோ மார்க்ரி தெரிவித்துள்ளார். இந்த கப்பலை தேடும் பணியில் நாசாவின் ஆய்வு கப்பல் இணைந்துள்ளது. பிரிட்டனும், அந்தப் பிரதேசத்திலுள்ள நாடுகளும் உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளன.

நீர்மூழ்கிக் கப்பல்

தென் அமெரிக்காவின் தெற்கு முனை பகுதிக்கு அருகில் ஊஸ்வாயாவில் வழக்கமான சேவையில் இருந்து, அதனுடைய தளமான பர்னஸ் அயர்ஸின் தெற்கிலுள்ள மார் டெல் பிலாடாவுக்கு டீசல்-மின்சார சக்தியால் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் திரும்பி வந்து கொண்டிருந்தது.

அர்ஜென்டினாவின் போர்க் கப்பல் மற்றும் இரண்டு வழித்துணை கப்பல்கள், இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடைசியாக இருந்ததாக அறியப்படும் தென் கிழக்கு வல்டெஸ் தீபகற்பத்தில் தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகின்றன.

கடும் காற்றாலும், உயரமான அலைகளாலும் மீட்புதவியாளர்களின் பணி மேலும் சிக்கலாகியுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல்

மின் சக்தி துண்டிப்பால் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தகவல் தொடர்பை இழந்துவிட்டால், நீர்மூழ்கிக் கப்பல், கடல் நீரின் மேற்பகுதிக்கு வர வேண்டும் என்று கடற்படை விதிமுறைகள் கூறுகின்றன.

ஜெர்மனியால் கட்டியமைக்கப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் 1983 ஆம் ஆண்டு சேவையை தொடங்கியது. அர்ஜென்டினாவின் கடற்படையில் இருக்கும் 3 நீர்மூழ்கிக் கப்பல்களில் புதிய நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.