SuperTopAds

வாக்குகளுக்காக விடுதலைப் புலிகளின் ரகசியத்தை அம்பலப்படுத்தும் கருணா!

ஆசிரியர் - Editor II
வாக்குகளுக்காக விடுதலைப் புலிகளின் ரகசியத்தை அம்பலப்படுத்தும் கருணா!

என்னிடமுள்ள 6,000 போராளிகளில் 2,000 பேரை வன்னிக்கு அனுப்புமாறு தலைவர் பிரபாகரன் என்னிடம் கேட்டு கொண்டார், நான் எனது போராளிகளை பலிக்கடாவாக்க விரும்பவில்லை, அவர்களை அனுப்பமாட்டேன் என்றேன் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வீட்டுக்கு ஒரு போராளி என பலவந்தமாகப் பிடித்து வைத்துள்ளோம், இவ்வாறு பலவந்தமாக பிடித்து வைத்துள்ள போராளிகளை சண்டைக்கு அனுப்பினால் என்ன நடக்கும். என்பது எனக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் மட்டக்களப்பு தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் கட்சி அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தொப்பிக்கல காட்டில் நான் இருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உண்மையிலே நான்தான் உருவாக்கினேன். யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது, நாம் அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தோம், இது வெளி உலகத்திற்குத் தெரியவந்தது.

பின்னர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் எடுத்துக்கூறி கிளிநொச்சியிலே வைத்து எமக்குரிய ஒரு அரசியல் பிரதிநிதிகளாக இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்றுதான் அதை உருவாக்கினோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாகத்தான் இயங்கியது. ஆனால் போராட்டங்கள் நிறுத்தப்பட்டதன் பிற்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளில் பாரிய மாற்றங்களும், அவர்களின் போக்குகளிலும் மாற்றங்களும் காணப்படுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே போட்டிகள், பொறாமைகள், காரணமாக அக்கூட்டமைப்பை இன்னும் பதிவு செய்யவில்லை.

நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும் சந்தர்ப்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த தேசியக் கட்சியில் நான் ஒருபோதும் தேர்தல் கேட்டு வரவில்லை, சிங்களக் கட்சியில் தேர்தல் கேட்பது எனது நோக்கமல்ல.

அதனை நான் ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன். அவ்வாறு மக்களிடம் வாக்குப் கேட்பதாயின் தமிழ் கட்சி ஒன்று அமைத்து அதனூடாகத்தான் வரவேண்டும் என நினைத்திருந்தேன். இந்நிலையில்தான் கடந்த வருடம் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற ஒரு கட்சியை ஆரம்பித்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றுமுழுதாகச் சிதறிப் போவதற்கு வாய்ப்பிருக்கின்றது. ஏற்கனவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் விலகிவிட்டனர், சம்மந்தன் ஐயாவுக்கும் வயது போய்விட்டது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒருபோதும் ஒற்றுமையில்லை. வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்கு ஒரு உறுதியான கட்சி வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கின்ற கட்சியை ஆரம்பித்துள்ளோம்.

எமது கட்சியின் நோக்கங்களாக முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கப்பட வேண்டும், வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்கள் கிட்டத்தட்ட 80,000 விதவைப் பெண்கள் உள்ளார்கள், அவர்களுக்கு உதவ வேண்டும். தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

கிழக்கில் 11 ஆசனங்களை வைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களை வைத்திருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுத்திருந்தது. இது முறுமுழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறாகும்.

ஒரு மலசலம்கூட கட்டிக் கொடுக்க முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் இந்நிலையில் அவர்களின் கட்சி பிரதேச சபையில் போட்டியிட்டு எவற்றைச் செய்யப்போகின்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அமீரலி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஹிஸ்புல்லா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அழிந்து போகின்ற கட்சி, எனவே அக்கட்சிக்குப் பின்னால் எமது மக்கள் வாக்களிக்க வேண்டுமா என்றால் இல்லை.

சாதிக்க கூடியவர்களின் பின்னால்தான் மக்கள் வரவேண்டும். எதிர்வருகின்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தையல் இயந்திரச் சின்னத்தில் நாம் களமிறங்கியுள்ளோம் இதில் எமது கட்சியை வெல்ல வைக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழனை முதலமைச்சராக்க வேண்டும். அதற்குரிய அத்திவாரத் தேர்தல்தான் இது, இதில் நாங்கள் தவறைவிட்டோமாக இருந்தால், கிழக்கு மாகாணம் மீண்டும் முஸ்லிம்களின் கையில்தான் போகும். இதனைத் தடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபைக்கு கிழக்கிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்தால் 12 ஆசனங்கள் எடுக்கலாம், ஒட்டு மொத்த முஸ்லிம்கள் வாக்களித்தால் கிட்டத்தட்ட 9 ஆசனங்கள் எடுக்கலாம், அதுபோல் சிங்கள மக்கள் வாக்களித்தால் 8 ஆசனங்களை எடுக்கலாம்.

முன்னாள் கிழக்கு முதலமைச்சர் நஸீர் அகமட் 4,500 இற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை வழங்கியிருந்தார். அதில் தமிழர்கள் உள்வாங்கப்பட்டது மிக மிகக் குறைவு.

அமெரிக்காவிலிருந்த பாரிய கட்டடத்தை ஒஷாமா பின்லேடன் தாக்கியழித்த பின்னர் உலகத்தில் எந்தப் பயங்கராவாத இயக்கமும் இருக்கக் கூடாது அதனை அழிக்க வேண்டும், என சர்வதேசம் ஒரு முடிவை எடுத்துக்கொண்டது.

அந்த அழிவிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் முயற்சி எடுத்தது உண்மையான விடயம், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

பின்னர் என்னிடமுள்ள 6,000 போராளிகளில் 2,000 பேரை வன்னிக்கு அனுப்புமாறு தலைவர் பிரபாகரன் என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் எனது போராளிகளை பலிக்கடாவாக்க விரும்பவில்லை.

அவர்களை அனுப்பமாட்டேன் என தெரிவித்தேன். ஏற்கனவே வீட்டுக்கு ஒரு போராளிகளைப் பலவந்தமாகப் பிடித்து வைத்துள்ளோம், இவ்வாறு பலவந்தமாக பிடித்து வைத்துள்ள போராளிகளை சண்டைக்கு அனுப்பினால் என்ன நடக்கும் என்பது நமக்கும் தெரியும்.

ஒஸ்லோவிலே வைத்து சமஸ்டி முறையிலான தீர்வு பற்றி பரசீலிக்கின்றோம் என புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கு நான் தூண்டியது உண்மை. விடுதலைப் புலிகள் பக்கம் அன்றன் பாலசிங்கமும், இலங்கை அரசின் பக்கமிருந்து ஜீ.எல்.பீரீஸூம் கையெழுத்திட்டார்கள். இதையும் தலைவர் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லை.

இது ஒரு தவறான முடிவு என்று என்னை பிரபாகரன் குற்றம் சாட்டடினார். இதன் காரணமாக நான் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டது உண்மை. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் நான் காட்டிக் கொடுத்தது என்பது ஒரு தவறான விடயமாகும்.

என்னைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளிடமிருந்து விலகிய பிற்பாடு தலைவர் பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக மாத்திரம் ஒரே ஒரு தடவை தான் களமுனைக்குச் சென்றிருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.