SuperTopAds

அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தக் கோரும் நியூசிலாந்து பிரதமர், மறுக்கும் ஆஸ்திரேலியா!

ஆசிரியர் - Admin
அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தக் கோரும் நியூசிலாந்து பிரதமர், மறுக்கும் ஆஸ்திரேலியா!

மனுஸ்தீவு மற்றும் நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த அகதிகளில் சுமார் 2000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 150 அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்த ஆஸ்திரேலியாவிடம் நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டெர்ன் கோரி வருகிறார் . அத்துடன் இந்த அகதிகளின் நலனுக்காக 3 மில்லியன் டாலர்கள் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1250 அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் ஒப்பந்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதால், அதன் பிறகே வேறொரு ஒப்பந்தம் குறித்து யோசிக்க வேண்டும் என்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்.

பப்பு நியூ கினியாவிலுள்ள மனுஸ்தீவு கடற்படைத்தளத்திலிருந்த அகதிகள் முகாம் ஒன்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுள்ள நிலையில், மாற்று முகாம் பாதுகாப்பற்றது என நூற்றுக்கணக்கான அகதிகள் வெளியேற மறுத்து வருகின்றனர். இவர்கள கடந்த இரு வாரங்களாக உணவு, தண்ணீர், சுகாதார உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அங்கேயே தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நியூசிலாந்தில் குடியமர்த்தும் ஒப்பந்தம் பற்றி ஆஸ்திரேலியாவிடம் நியூசிலாந்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றது.

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த அகதிகள் நான்கு ஆண்டுக்காலமாக இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நவுருவும் பப்பு நியூகினியாவும் இறையாண்மைக் கொண்ட இருவேறு நாடுகளாக இருந்தாலும், அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாம் என்பது ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் என்றே குறிப்பிடப்படுகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள சிறிய நாடான பப்பு நியூகினியாவுடன் நியூசிலாந்து நேரடியாக ஒப்பந்தம் கையெழுத்திடுவதில் புவிசார் அரசியல் சிக்கலுள்ளது.

பப்பு நியூகினியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான சாத்தியம் குறித்து ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டனிடம் கேட்ட பொழுது, “இறையாண்மைக் கொண்ட எந்த இரு நாடுகளும் ஒப்பந்தத்தை கையெழுத்திடலாம். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவுடனான உறவுக்குறித்து யோசிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இக்கருத்து மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றது.

“மனுஸ்தீவில் உள்ள அகதிகளை நியூசிலாந்து எடுத்துக்கொள்ள நினைத்தால், ஆஸ்திரேலியா அதில் குறுக்கிடக் கூடாது” என ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவரான பில் ஷார்டன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து முன் வைத்துள்ள குடியமர்த்தலுக்கான கோரிக்கையை பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ள ஆஸ்திரேலியா, அகதிகள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்பட்டால் ஆட்கடத்தல்ந டவடிக்கை மீண்டும் தலைத்தூக்கும் என கருதுகின்றது.