வட கொரிய நெருக்கடி: கவனமுடன் பேச்சுவார்த்தையை தொடரும் தென் கொரியா
மிகவும் கவனமாக வட கொரியாவுடன் நடைபெறும் உயர்நிலை பேச்சுவார்த்தைகளை தொடரப்போவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியா அதனுடைய அணு ஆயுத திட்டத்திற்கு அதிக காலம் எடுத்துக்கொள்வதற்காக தென் கொரியாவுடன் நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தலாம் என்ற சர்வதேச நாடுகளின் எச்சரிக்கைக்கு மத்தியில் தென் கொரியா இவ்வாறு தெரிவித்துள்ளது.
"இருக்கின்ற வாய்ப்புகளில் இருந்து அதிகமான பயன்களை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சர் காங் கையுங்-வஹா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் "ஐக்கிய கொரியா" கொடியின் கீழ் ஒன்றாக அணிவகுக்க வட மற்றும் தென் கொரியா இசைந்துள்ளன.
அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் வட கொரியாவின் மீதான அழுத்தத்தை தொடரப்போவதாக உறுதி செய்திருந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
வட கொரியா மீதான தடைகள் உண்மையிலேயே பாதிக்க தொடங்கியுள்ளன என்று புதன்கிழமை தெரிவித்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், அழுத்தங்கள்தான் வட கொரியாவை அதனுடைய அணு மற்றும் பேலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் பற்றி படிப்படியாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
தன்னையும், தன்னுடைய கூட்டாளி நாடுகளையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலை வந்தால் வட கொரியாவை அமெரிக்கா அழித்துவிடும் என்று கடந்த ஆண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
பியாங்யாங்கின் சமீபத்திய "வசீகர தாக்குதலுக்கு" உலக நாடுகள் கண்மூடித்தனமாக இருந்துவிட கூடாது என்று கனடாவில் நடைபெற்ற வட கொரியா பற்றிய சர்வதேச கூட்டம் ஒன்றில் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தாரோ கோனோ தெரிவித்துள்ளார்..
வட கொரியா மீதான தங்களின் கண்காணிப்பை உலக நாடுகள் கைவிட கூடாது என்று கோனோ வலியுறுத்தியுள்ளார்.
"வட மற்றும் தென் கொரியா இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை வட கொரியா ஊக்குவிப்பதால், தடைகளை தளர்த்தி அல்லது ஏதாவது உதவிகளை வழங்கி இந்த நடவடிக்கைக்கு சன்மானம் வழங்க வேண்டிய நேரம் இதுவல்ல" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"வட கொரியா மீதான தடைகள் வேலை செய்கின்றன என்பதை அந்நாடு தன்னை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதே காட்டுகிறது" என்று கோனோ கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், வட கொரியாவுக்கு எதிரான சர்வதேச தடைகளை புறக்கணிப்பதாக ரஷ்யாவை அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
"ரஷ்யா வட கொரியா விடயத்தில் நமக்கு உதவுவதில்லை. சீனா உதவும் வகையில், ரஷ்யா உதவவில்லை" என்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"பல தசாப்தங்களாக வட கொரியாவை கையாண்டு, அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதால், வேறு யாரையும் தவிர, தென் கொரியாதான் வட கொரியாவை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று காங் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த சமீப காலத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. ஆனால். இதுவொரு வாய்ப்பு" என்று அவர் தெரிவித்துள்ளார்.
"பேச்சுவார்த்தையில் ஏன் இருக்கிறார்கள் என்று நீங்கள் எல்லா நிலையும் சிந்திக்கலாம். முடிவுகளை மேற்கொள்ளும் வட கொரியர்களின் செயல்பாடுகளை பற்றிய கணக்கீடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன" என்று அவர் கூறியுள்ளார்.
"ஆனால், கடைசியில், அதில் அதிக பயனை பெற வேண்டும்" என்றார் அவர்.
தென் கொரியாவும், அதன் கூட்டாளி நாடுகளும், நீண்டகால அளவில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிக்கின்ற நோக்கத்தில் ஒன்றாக இருப்பதாக காங் கூறியுள்ளார்.
தடைகள் பாதிப்புக்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளதால், மேலதிக மனிதநேய உதவி அனுப்பப்பட வேண்டும் என்று தென் கொரியா விரும்புவதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் தொடர்பாக ஒப்புக்கொள்ளப்பட்டவை
இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின்போது உற்சாகமூட்டுவதற்காக 230 பேரை அனுப்ப வட கொரியா சம்மதித்துள்ளது.
இந்த விளையாட்டின்போது 140 இசைக்கலைஞர்கள் அடங்கிய இசைக்குழு ஒன்றை வட கொரியா அனுப்புவதற்கு 2 கொரியாக்களும் ஏற்கெனவே இசைந்துள்ளன.
வட கொரியாவில் இருந்து 30 டைகுவாண்டோ வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக எல்லை சாலை திறக்கப்படுவது இதைக் காட்டுகிறது.
முதல்முறையாக இந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இரண்டு கொரியாக்களும் இணைந்து ஒரு ஐஸ் ஹாக்கி அணி உருவாக்கி போட்டியில் பங்குபெறுகின்றன.
வட கொரியா பதிவு செய்கின்ற காலக்கெடுவை தவறவிட்டுள்ளதாலும், தகுதி பெற தோல்வியடைந்துள்ளதாலும் சனிக்கிழமை நடைபெறுகின்ற சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
வட கொரியாவுக்கு பணப்பரிமாற்றம், வட கொரியாவின் சில அதிகாரிகளுக்கான தடை ஆகிய ஐநா பாதுகாப்பு அவையின் தடைகளை மீறாமல் வட கொரிய பிரதிநிதிகளை வரவேற்கும் வழிமுறைகளில் தென் கொரியா செயல்பட வேண்டியுள்ளது.