சாதாரண தரம் சித்தியடையாதவரா சஜித்?
அமைச்சர் சஜித் பிரேமதாச லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிப்பரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் தேர்தலில் போட்டியிட முயற்சிப்பதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க சுமத்தி வரும் குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாச, புனித தோமையார் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியில் படித்தார். அவர் சாதாரணப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் அவரது தந்தையான ரணசிங்க பிரேமதாச, அவரை சிறுவயதிலேயே லண்டனில் விடுதியில் தங்கி படிக்கும் பாடசாலையில் சேர்த்தார்.
சஜித் பிரேமதாச, லண்டன் சாதாரணப் பரீட்சையிலும் லண்டனர் உயர் தரப் பரீட்சையிலும் சித்தியடைந்து, லண்டன் பொருளாதார கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். இலங்கை சாதார தரப் பரீட்சை சான்றிதழ் அவரிடம் இல்லாத போதிலும் லண்டன் சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ் அவரிடம் உள்ளது. அவற்றை நான் பார்த்திருக்கின்றேன். சஜித் பிரேமதாச படித்த பட்டதாரி தலைவர் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.