SuperTopAds

அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை!- சம்பந்தன்

ஆசிரியர் - Admin
அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை!- சம்பந்தன்

புலிகள் இயக்கத்தை அழித்தால் தமிழ் மக்களது பிரச்சினைக்கு நிரந்தரமான நியாயமான அரசியல் தீர்வினை ஏற்படுத்திக் கொடுப்போம் என இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் இலங்கை வாக்கு கொடுத்தது. ஆனால், இன்று வரை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் வெறுமனே பார்வையாளர்களாகவே இருக்கப்போகின்றார்களா?. தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமையுள்ளது அல்லவா? எனவே, இந் நாட்டுக்குள் தீர்க்கப்பட முடியாத பிரச்சினை வேறெங்காவது தீர்க்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தந்தை செல்வநாயகம் அறக்கட்டளையினால் யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட கலையரங்கத்தைத் திறந்து வைத்து அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

'ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பதாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எங்களால் இயன்ற முயற்சிகளை நாங்கள் எடுத்தோம். ஆனால், அது கைகூடவில்லை. ஆயுதப் போராட்டம் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததேதான். அத்தோடு தமிழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதுமேயாகும். இவை தான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்க முக்கியமான காரணமாக அமைந்தது.

இன்றைக்கு ஆயுதப் போராட்டம் ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. அந்த முடிவை ஏற்படுத்துவதற்குச் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு போதிய ஆதரவை வழங்கியது. குறிப்பாக, இந்தியா அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளும் இலங்கைக்கு உதவி வழங்கியது. அதன் மூலமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்யும் நிலை உருவாகியது.

ஆனால், அப்பொழுது இலங்கை அரசாங்கம் இனப் பிரச்சனைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொடுப்போம் என்று சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியைக் கொடுத்தது. அவ்வாறு சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. ஆக, யுத்தம் முடிவடைந்து ஏறத்தாழ பத்து வருடங்கள் ஆகிவிட்டன. சர்வதேச சமூகம் தொடர்ந்தும் பார்வையாளர்களாக இருக்கப் போகின்றார்களா? சர்வதேச சமூகம் தொடர்ந்தும் பார்வையாளர்களாக இருக்கலாமா?. சர்வதேச சமூகத்திற்கும் இந்தியாவிற்கும் ஒரு கடமை பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு உலகத்தில் பல்வேறு நாடுகளில் இடம்பெற்று வருகின்ற ஆட்சி முறையின் அடிப்படையில் ஒரு நியாயமான நிரந்ரதரமான தீர்வை காண ஒரு வழியை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கு ஒரு கடமையில்லையா?. இது தான் தற்போதுள்ள கேள்விகள். ஆகவே அது நடைபெறாவிட்டால் என்ன நடக்கும் என்றால், இந்த நாட்டுக்குள் தீர்க்க முடியாத பிரச்சினை வேறு எங்காவது தீர்க்கப்பட வேண்டிவரும். எனவே, தற்போது நாம் முக்கியமான காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

எம்மைப் பொறுத்தவரையில் எமது மக்களுடைய பரிபூரணமான ஆதரவுடன் தந்தை செல்வாவின் பாதையில் பயணிக்கின்றோம். அந்தப் பயணம் நல்ல முடிவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதனை எமது மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். அவ் விதமான ஒரு நிலைமை உருவாகாமல் விட்டால் நாங்கள் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் வேறு வழிகளை நாட வேண்டி வரும். தந்தை செல்வா உயிரோடு இருந்திருந்தால் எதைச் செய்வாரோ அல்லது எதைச் செய்ய நினைப்பாரோ அதைத் தான் நாங்களும் செய்கின்றோம் தொடர்ந்தும் அதையே செய்வோம் என்றார்.