வதந்தி பரப்பியவா்களுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு செல்வோம், பொலிஸாருக்கு எச்சாிக்கை..
பிறந்த குழந்தைக்கு சஹ்ரான் எனப்பெயர் சூட்டப்பட்டதாக வதந்தி : பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளாவிடின், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினை நாடவுள்ளோம் – DR ஆர்.முரளீஸ்வரன்
எமது வைத்தியசாலையின் பெயருக்கு அவதூறு மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளாவிடின், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினை நாடி தீர்வைப் பெறவுள்ளதாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிறந்த குழந்தைக்கு சஹ்ரான் பெயர் சூட்டப்பட்டதாக சமூக வலைத்தளம் மற்றும் சில இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், தற்போதைய கால கட்டத்தில் ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முனைவதில் அனைத்தின மக்களும் அவதானமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தியுள்ளது.
இச்சம்பவம் போலியாகச் சோடிக்கப்பட்டதாகவும் காழ்ப்புணர்சியின் மூலம் எமது வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் அவ்வாறான எந்த நிகழ்வும் இடம்பெறவில்லையென கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராகத் தெரிவிக்கின்றேன் என்றாா்.