ஈரான் - அமெரிக்கா இடையேயான உறவு மேலும் மோசமடையும் ஆபத்து!
ஈரான் அச்சுறுத்தல் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு, கூடுதலாக, ஆயிரத்து 500 துருப்புகளை அனுப்ப உள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. மத்திய தரைக்கடல், பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா, செங்கடல் ஆகிய கடற்பரப்புகளை ஒட்டி அமைந்திருக்கும், சூடான், லிபியா, எகிப்து, ஈரான், ஈராக், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி உள்ளிட்டவை மத்திய கிழக்கு நாடுகளாகும்.
இதில், ஈரான் - அமெரிக்கா இடையிலான உறவு, அண்மைக்காலமாக மீண்டும் பதற்றத்திற்கு உரிய ஒன்றாக மாறியிருக்கிறது. ஈரான் மீது அடுத்தடுத்து பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, அந்நாட்டுடனான, 2015ஆம் ஆண்டு அணுஆற்றல் ஒப்பந்தத்திலிருந்தும் வெளியேறியது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. அண்மையில் ஓமன் வளைகுடா பகுதியில், 2 எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா சந்தேகிப்பதால், இருநாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்திருக்கிறது.
இந்நிலையில், வாஷிங்டனில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பேட்ரீக் சனாகான் (Patrick Shanahan), மத்திய கிழக்கு நாடுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, கூடுதலாக ஆயிரத்து 500 துருப்புகள் அனுப்பப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஈரானிடமிருந்து தொடர்ந்து அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் காரணமாகவுவே, மத்திய கிழக்கு நாடுகளில், தமது துருப்புகளை அதிகரிக்கும் பணிகளை மேற்கொண்டிருப்பதாக, பேட்ரீக் கூறியிருக்கிறார்.