SuperTopAds

ஹிஸ்புல்லாவுக்கு இணைத்தலைவர் பதவி - வியாழேந்திரன் போர்க்கொடி!

ஆசிரியர் - Admin
ஹிஸ்புல்லாவுக்கு இணைத்தலைவர் பதவி - வியாழேந்திரன் போர்க்கொடி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில்? மாவட்ட அபிவிருத்தி குழுவில் இணைத்தலைவராக ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நேற்றுக் காலை ஆரம்பமான நிலையில், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு மாறாக இணைத்தலைவர் நியமனம் நடைபெறுவதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார். இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

“25 வீதமான முஸ்லீம் மக்கள் மட்டக்களப்பில் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர்களின் பிரதிநிதிகள் சுமார் 4 பேர் இணைத்தலைவர்களாக செயற்பட்டு வருகின்றார்கள். ஆனால் 75 வீதமான சனத்தொகையை கொண்டுள்ள தமிழ் மக்கள் சார்பாக ஒருவர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை எடுத்துக் கொண்டு தங்களது தனிப்பட்ட இனம் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவியை கொண்டே கோயில் காணியை பெற்றுக்கொண்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா கூறியிருந்தமையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதை வெறுமனே பார்த்து கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.